மாவட்ட கிரிக்கெட் இறுதிப் போட்டி:கூடலூர் புளூஹில்ஸ் அணி வெற்றி
ஊட்டியில் நடந்த மாவட்ட அளவிலான ‘ சி ' டிவிஷன் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கூடலூர் புளூஹில்ஸ் அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.;
கோத்தகிரி
ஊட்டியில் நடந்த மாவட்ட அளவிலான ' சி ' டிவிஷன் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கூடலூர் புளூஹில்ஸ் அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.
கிரிக்கெட் போட்டி
நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் ஊட்டி மற்றும் கோத்தகிரியில் மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் ஊட்டியில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் சி டிவிஷன் பிரிவிற்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. லீக் சுற்றுப் போட்டிகளில் அதிக புள்ளிகள் பெற்ற கோத்தகிரி பிக் மாஸ்டர்ஸ் மற்றும் கூடலூர் புளூ ஹில்ஸ் அணிகள் இறுதிப் போட்டியில் மோதியது. இந்தப் போட்டியில் டாசை வென்று முதலில் பேட்டிங் செய்த கூடலூர் புளூஹில்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் குவித்தது. இந்த அணி வீரர்கள் பி.எம்.சாதிக் அலி 152 ரன்கள், கே.கே. சாதிக் அலி 53 ரன்கள், கார்த்திக் 33 ரன்கள் எடுத்தனர். பிக் மாஸ்டர்ஸ் அணியின் பந்து வீச்சாளர் சபீக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
புளூ ஹில்ஸ் அணி வெற்றி
இதனைத் தொடர்ந்து 210 பந்துகளில் 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய கோத்தகிரி பிக் மாஸ்டர்ஸ் கிரிக்கெட் அணி 14.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து வெறும் 71 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. கூடலூர் அணியின் பந்து வீச்சாளர் கே.கே.சாதிக் அலி 4 விக்கெட்டுகளையும், பி.எம்.சாதிக் அலி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன் மூலம் 211 ரன்கள் வித்தியாசத்தில் கூடலூர் புளூ ஹில்ஸ் அணி வெற்றி பெற்று சி டிவிஷன் சாம்பியன் பட்டம் வென்றது.