மாரத்தான் உலக சாதனையாளர் கெல்வின் விபத்தில் மரணம்

24 வயதான கெல்வின், பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Update: 2024-02-12 20:12 GMT

நைரோபி,

கென்யாவை சேர்ந்த பிரபல நீண்ட தூர ஓட்டப்பந்தய வீரரான கெல்வின் கிப்தும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த சிகாகோ (அமெரிக்கா) மாரத்தான் போட்டியில் பந்தய தூரத்தை (42.195 கிலோ மீட்டர்) 2 மணி 35 வினாடியில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார். 2022-ம் ஆண்டு நடந்த வலென்சியா (ஸ்பெயின்) மற்றும் கடந்த ஆண்டு நடந்த லண்டன் மாரத்தான் போட்டிகளிலும் முதலிடத்தை பிடித்து சாதித்த 24 வயதான கெல்வின் வருகிற ஜூலை, ஆகஸ்டு மாதம் பாரீசில் நடைபெறும் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன் அவர் 2 மணி நேரத்துக்குள் பந்தய இலக்கை கடக்கும் நோக்குடன் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

இந்த நிலையில் மேற்கு கென்யாவில் நேற்று முன்தினம் இரவு பயிற்சியை முடித்து மாரத்தான் வீரர் கெல்வின் கிப்தும் தனது பயிற்சியாளர் கெர்வாஸ் ஹகிசிமானா (ருவாண்டா) மற்றும் ஒரு இளம் பெண்ணுடன் காரில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அவர் ஓட்டிய கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி கால்வாயில் இறங்கி பிறகு அருகில் உள்ள மரத்தில் பயங்கரமாக மோதி நின்றது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுக்கியது. சம்பவ இடத்திலேயே கெல்வின் கிப்தும் மற்றும் அவரது பயிற்சியாளர் பலியானார்கள். படுகாயம் அடைந்த இளம்பெண் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கெல்வின் கிப்தும் மறைவு கென்யாவில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது மறைவுக்கு அந்த நாட்டு அதிபர் வில்லியம் ருடோ, உலக தடகள சங்க தலைவர் செபாஸ்டியன் கோ உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்