ஈரோட்டில் மாநில அளவிலான கபடி போட்டி: கோவை மாவட்ட அணி முதல் இடம்

ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் கோவை மாவட்ட அணி முதல் இடம் பிடித்தது.;

Update:2022-08-17 02:12 IST

ஈரோடு

ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் கோவை மாவட்ட அணி முதல் இடம் பிடித்தது.

கபடி போட்டி

ஈரோடு சேரன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 19-வது ஆண்டாக மாநில அளவிலான கபடி போட்டி, ஈரோடு சூளை ஈ.பி.பி.நகர் பகுதியில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் எஸ்.பி.பூபதி தலைமை தாங்கினார். ஈரோடு மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இதில் ஈரோடு, நாமக்கல், திருச்சி, கரூர், திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 75-க்கும் மேற்பட்ட அணி வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். போட்டிகள் நாக்அவுட் முறையில் நடத்தப்பட்டது.

பரிசளிப்பு விழா

இறுதி போட்டியில் கோவை பி.ஜே. பிரதர்ஸ் அணியினரும், கோபி ஏ.எம்.கே.சி. அணியினரும் மோதிக்கொண்டனர். முடிவில் கோவை மாவட்டத்தை சேர்ந்த பி.ஜே. பிரதர்ஸ் அணி வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது. இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் அமெச்சூர் கபடி கழக தலைவர் ராஜ்குமார், அமைப்பு செயலாளர் அன்பழகன், துணைச்செயலாளர் பாலாஜி, பொருளாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பையை வழங்கினார்.

இதில் முதல் இடம் பிடித்த அணிக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ.30 ஆயிரம் மதிப்பிலான கோப்பை, 2-ம் இடம் பிடித்த அணிக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான கோப்பை, 3-ம் இடம் பிடித்த அணிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கோப்பை, 4-ம் இடம் பிடித்த அணிக்கு ரூ.7 ஆயிரத்து 500 மற்றும் ரூ.7 ஆயிரத்து 500 மதிப்பிலான கோப்பை, கால் இறுதி போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்த 4 அணிகளுக்கு தலா ரூ.2 ஆயிரத்து 500 மற்றும் ரூ.2 ஆயிரத்து 500 மதிப்பிலான கோப்பைகள் வழங்கப்பட்டன.

இதில் திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், மாநகராட்சி மண்டல தலைவர் காட்டு சுப்பு, கவுன்சிலர்கள் ஜெகதீஷ், கவுசல்யா சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்