சென்னை ஓபன் இரட்டையர் பட்டத்தை வென்ற சர்வதேச டென்னிஸ் வீரர் ஜீவன் நெடுஞ்செழியன் திருமணம் கோல்ப் வீராங்கனையை மணக்கிறார்

சென்னை ஓபன் இரட்டையர் பட்டத்தை வென்ற சர்வதேச டென்னிஸ் வீரர் ஜீவன் நெடுஞ்செழியன் திருமணம் சென்னையில் ஏப்ரல் 2–ந் தேதி நடக்கிறது. அவர் முன்னணி கோல்ப் வீராங்கனை நேகா திரிபாதியை மணக்கிறார். சென்னை ஓபன் சாம்பியன் சென்னையை சேர்ந்த வளர்ந்து வரும் டென்னிஸ் நட

Update: 2017-01-09 23:30 GMT

சென்னை ஓபன் இரட்டையர் பட்டத்தை வென்ற சர்வதேச டென்னிஸ் வீரர் ஜீவன் நெடுஞ்செழியன் திருமணம் சென்னையில் ஏப்ரல் 2–ந் தேதி நடக்கிறது. அவர் முன்னணி கோல்ப் வீராங்கனை நேகா திரிபாதியை மணக்கிறார்.

சென்னை ஓபன் சாம்பியன்

சென்னையை சேர்ந்த வளர்ந்து வரும் டென்னிஸ் நட்சத்திரம் ஜீவன் நெடுஞ்செழியன். நேற்று முன்தினம் முடிந்த சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் உலக தர வரிசையில் 28–வது இடத்தில் இருக்கும் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து ஆடிய ஜீவன் நெடுஞ்செழியன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இருவரும் ஜோடி சேர்ந்த 2–வது போட்டியிலேயே கோப்பையை வென்று அசத்தினார்கள். 2011–ம் ஆண்டுக்கு பிறகு சென்னை ஓபன் இரட்டையர் பட்டத்தை இந்திய ஜோடி வெல்வது இது முதல்முறையாகும்.

ரோகன் போபண்ணா வென்ற 15–வது பட்டம் இதுவாகும். 3 முறை ஏ.டி.பி.சேலஞ்சர் பட்டத்தை வென்று இருக்கும் ஜீவன் நெடுஞ்செழியன் கைப்பற்றிய முதலாது ஏ.டி.பி. உலக டூர் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் 28 வயதான ஜூவன் உலக இரட்டையர் தர வரிசையில் 100–வது இடத்தில் இருந்து 14 இடங்கள் முன்னேற்றம் கண்டு 86–வது இடத்தை எட்டிப் பிடித்து இருக்கிறார். இறுதிப்போட்டியில் இந்தியாவின் புராவ் ராஜா–திவிஜ் சரண் இணையை சாய்த்ததில் ஜீவன் நெடுஞ்செழியன் சிறப்பான பங்களிப்பை அளித்தார். அவரது ஆட்டம் நேர்த்தியாகவும், அபாரமாகவும் இருந்தது.

ஜூவன் நெடுஞ்செழியன் திருமணம்

சென்னை ஓபன் பட்டத்தை வென்று அசத்திய ஜூவன் நெடுஞ்செழியன் விரைவில் இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க இருக்கிறார். அவர் கொல்கத்தாவை சேர்ந்த ராணுவ உயர் அதிகாரியின் (கர்னல்) மகளான நேகா திரிபாதியை மணக்க இருக்கிறார். இவர்களது திருமணம் சென்னையில் ஏப்ரல் 2–ந் தேதி நடக்கிறது.

25 வயதான நேகா இந்தியாவின் முன்னணி கோல்ப் வீராங்கனைகளில் ஒருவர் ஆவார். சர்வதேச கோல்ப் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்த விளையாட்டு நட்சத்திரங்களின் இரண்டு ஆண்டு கால காதல் கல்யாணமாக கனிந்து இருக்கிறது.

தாத்தாவுக்கு அர்ப்பணிப்பு

சென்னை ஓபன் பட்டத்தை வென்ற ஜீவன் நெடுஞ்செழியன் ‘தினத்தந்தி’ நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

சென்னை ஓபன் பட்டத்தை வென்று இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுக்கு மத்தில் கோப்பையை வென்றது மறக்க முடியாததாகும். உலக தர வரிசையில் முன்னணியில் இருக்கும் ரோகன் போபண்ணா என்னுடன் இணைந்து விளையாட சம்மதித்தது சிறப்பான வி‌ஷயமாகும். முதலில் அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த சென்னை ஓபன் பட்டத்தை எனது டென்னிஸ் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகித்த தாத்தா குற்றாலிங்கத்துக்கு அர்ப்பணிக்கிறேன்.

ஆஸ்திரேலிய ஓபன் உள்ளிட்ட கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றால் தர வரிசையில் ஏற்றம் காண வேண்டியது மிகவும் அவசியமானதாகும். உலக தர வரிசையில் முன்னேற்றம் காண்பதில் எனது முழு கவனத்தையும் செலுத்த இருக்கிறேன். அதற்காக அடுத்த வாரத்தில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட இருக்கிறேன். இந்தோனேஷியா வீரர் கிறிஸ்டோபர் ருங்காட்டுடன் ஜோடி சேர்ந்து இந்த போட்டியில் கலந்து கொள்கிறேன்.

60–வது இடத்துக்குள் வர இலக்கு

இந்த ஆண்டுக்குள் உலக இரட்டையர் தர வரிசையில் 60–வது இடத்துக்குள் இடம் பிடிக்க வேண்டும் என்பதே எனது இலக்காகும். அதற்காக கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். எனது இலக்கை எட்டி கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு ஜீவன் நெடுஞ்செழியன் கூறினார்.

மேலும் செய்திகள்