டென்னிஸ் தரவரிசை: ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார், ஹாலெப்

சீன ஓபன் டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் 2-ம் நிலை வீராங்கனை

Update: 2017-10-07 23:00 GMT
பீஜிங்,

சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-2, 6-4 என்ற நேர் செட்டில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஆஸ்டாபென்கோவை (லாத்வியா) பந்தாடினார். இதன் மூலம் பிரெஞ்ச் ஓபன் இறுதி ஆட்டத்தில் அவரிடம் அடைந்த தோல்விக்கும் பழிதீர்த்துக் கொண்டார்.

இந்த வெற்றியின் மூலம் 26 வயதான சிமோனா ஹாலெப், தரவரிசையில் முதல்முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு முன்னேறியுள்ளார். அதிகாரபூர்வமாக புதிய தரவரிசை பட்டியல் நாளை வெளியாகும்.
கம்ப்யூட்டர் தரவரிசை முறை 1975-ம் ஆண்டு அறிமுகம் ஆனது. அதன் பிறகு ‘நம்பர் ஒன்’ அரியணையில் அமரும் 25-வது மங்கை ஹாலெப் ஆவார். அதே சமயம் ருமேனியா நாட்டவர் ஒருவர் முதலிடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும். இதுவரை முதலிடம் வகித்த கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளப்படுகிறார்.

26 வயதான ஹாலெப் கூறுகையில், ‘இது எனக்கு உணர்வுபூர்வமான தருணம். மகிழ்ச்சியில் என்னை அறியாமலேயே அழுதுவிட்டேன். களத்தில் நான் அழுதது இது தான் முதல் தடவை என்று நினைக்கிறேன். இந்த நாளையும் சரி, இந்த தொடரையும் சரி ஒரு போதும் மறக்க மாட்டேன்’ என்றார்.

பெண்கள் இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் ஷூய் பெங் ஜோடி 6-2, 1-6, 5-10 என்ற செட் கணக்கில் அமெரிக்க ஓபன் சாம்பியனான மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து)- சான் யங் ஜான் (சீனத்தைபே) இணையிடம் போராடி வீழ்ந்தது.

மேலும் செய்திகள்