ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: நடாலை சாய்த்து பெடரர் ‘சாம்பியன்’

ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்தது. இதில் நேற்றிரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில்

Update: 2017-10-15 23:15 GMT
ஷாங்காய்,

 ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடாலும் (ஸ்பெயின்), 2-ம் நிலை வீரர் ரோஜர் பெடரரும் (சுவிட்சர்லாந்து) மல்லுகட்டினர். பரம போட்டியாளர்கள் கோதாவில் இறங்கியதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தது.

முதல் கேமிலேயே நடாலின் சர்வீசை முறியடித்த பெடரர் அதன் பிறகு அபாரமான ஷாட்டுகளை அடித்தும், 10 ‘ஏஸ்’ சர்வீஸ்களை வீசியும் நடாலை கலங்கடித்தார். 72 நிமிடங்களில் அவரது சவாலை முடிவுக்கு கொண்டு வந்த பெடரர் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இந்த பட்டத்தை 2-வது முறையாக வசப்படுத்தினார். இந்த ஆண்டில் பெடரர், நடாலை புரட்டியெடுப்பது இது 4-வது முறையாகும். ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்தகைய மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் அவர் வாகை சூடுவது இது 27-வது முறையாகும். அத்துடன் இந்த ஆண்டில் அவரது பெயரில் இணைந்து கொண்ட 6-வது பட்டமாகும்.

ஒட்டு மொத்தத்தில் பெடரருக்கு இது 94-வது சர்வதேச பட்டமாக அமைந்தது. இதன் மூலம் ‘ஓபன் எரா’ வரலாற்றில் (அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர்களும் அனுமதிக்கப்பட்ட 1968-ம் ஆண்டில் இருந்து) அதிக சர்வதேச பட்டங்கள் வென்றவர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள முன்னாள் வீரர் அமெரிக்காவின் இவான் லென்டிலை (இவரும் 94 பட்டம்) பெடரர் சமன் செய்தார். இந்த வகையில் அமெரிக்காவின் ஜிம்மி கானோர்ஸ் (109 பட்டம்) முதலிடம் வகிக்கிறார்.

மேலும் செய்திகள்