ரோஜர் பெடரர் மீண்டும் ‘சாம்பியன்’ 20-வது கிராண்ட்ஸ்லாம் வென்று சாதனை

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகுடம் சூடிய சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், கிராண்ட்ஸ்லாம் எண்ணிக்கையை 20-ஆக உயர்த்தி சாதனை படைத்தார்.

Update: 2018-01-28 23:30 GMT
மெல்போர்ன்,

‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா 2 வார காலமாக மெல்போர்ன் நகரில் நடந்து வந்தது. இதில் நேற்று அரங்கேறிய ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரோஜர் பெடரரும் (சுவிட்சர்லாந்து), 6-ம் நிலை வீரர் மரின் சிலிச்சும் (குரோஷியா) பலப்பரீட்சை நடத்தினர். கடுமையான வெயில் காரணமாக அரங்கின் மேற்கூரை மூடப்பட்டு மின்னொளியில் இருவரும் விளையாடினர்.

அனுபவம் வாய்ந்த பெடரருக்கு எல்லா வகையிலும் சிலிச் ஈடுகொடுத்து ஆடியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் 4 செட்டுகளில் இருவரும் தலா 2 வீதம் வென்றதால் கடைசி செட்டில் எதிர்பார்ப்பு அதிகமானது. ஆனால் இறுதி செட்டில் தொடக்கத்திலேயே சிலிச்சின் சர்வீசை முறியடித்து அசத்திய பெடரர், அதன் பிறகு தனக்கே உரிய பாணியில் புள்ளிகளை சேர்த்து சிலிச்சின் சவாலை முடிவுக்கு கொண்டு வந்தார்.

3 மணி 3 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் பெடரர் 6-2, 6-7 (5-7), 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் சிலிச்சை சாய்த்து பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார். 24 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது பெடரரின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தது. அதே சமயம் பந்தை வலுவாக வெளியே அடித்து விட்டு புள்ளிகளை தாரைவார்க்கும் தானாக செய்யக்கூடிய தவறுகளை சிலிச் அதிக முறை (64) இழைத்ததால் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

ஆஸ்திரேலிய ஓபனை பெடரர் உச்சிமுகர்வது இது 6-வது முறையாகும். ஏற்கனவே 2004, 2006, 2007, 2010, 2017-ம் ஆண்டுகளிலும் இங்கு மகுடம் சூடியிருந்தார். அத்துடன் ஆஸ்திரேலிய ஓபனை அதிக முறை வென்றிருந்த செர்பியாவின் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் ராய் எமர்சன் ஆகியோரின் சாதனையையும் சமன் செய்தார்.

பட்டத்தை கையில் ஏந்திய போது 36 வயதான பெடரர் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். ஒட்டுமொத்தத்தில் பெடரருக்கு இது 20-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமைந்தது. 20 கிராண்ட்ஸ்லாம் வென்ற முதல் வீரர் என்ற சரித்திர சாதனையும் அவரது வசம் ஆனது. பெடரருக்கு ரூ.20 கோடியும், சிலிச்சுக்கு ரூ.10 கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தது.

வெற்றியின் மூலம் பெடரர் முதலிடத்தை வெகுவாக நெருங்கியுள்ளார். நடாலை விட இன்னும் 155 தரவரிசை புள்ளிகள் மட்டுமே பின்தங்கி இருக்கிறார். சிலிச் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறுகிறார்.

இதன் கலப்பு இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஹங்கேரியின் டைமியா பபோஸ் ஜோடி 6-2, 4-6 (9-11) என்ற செட் கணக்கில் மேட் பவிச் (குரோஷியா)- கேப்ரியலா டாப்ரோவ்ஸ்கி (கனடா) இணையிடம் தோற்று கோப்பையை கோட்டை விட்டது.

ரோஜர் பெடரர், ஆஸ்திரேலிய ஓபனை 6 முறையும், பிரெஞ்ச் ஓபனை ஒரு முறையும், விம்பிள்டனை 8 முறையும், அமெரிக்க ஓபனை 5 முறையும் கைப்பற்றி இருக்கிறார். அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற டாப்-5 வீரர்கள் வருமாறு:-

பெடரர் (சுவிட்சர்லாந்து)- 20

நடால் (ஸ்பெயின்)-16

பீட் சாம்ப்ராஸ் (அமெரிக்கா)-14

ராய் எமர்சன் (ஆஸ்திரேலியா)-12

ஜோகோவிச் (செர்பியா)-12

மேலும் செய்திகள்