சுவிட்சர்லாந்து வீரர் பெடரர் முதலிடத்தை பிடித்தார்

உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் முதலிடத்தை பிடித்தார்.

Update: 2018-02-19 23:30 GMT
ரோட்டர்டாம்,

உலக டென்னிஸ் வீரர்- வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்களுக்கான ஒற்றையர் தரவரிசையில் ரோட்டர்டாம் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (10,105 புள்ளிகள்) நம்பர் ஒன் இடத்தை பெற்று இருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

36 வயதான ரோஜர் பெடரர் இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்று இருந்தார். இந்த சீசனில் 12-0 என்ற கணக்கில் வெற்றியை குவித்து இருக்கும் பெடரர் அதிக வயதில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு அமெரிக்க வீரர் ஆந்த்ரே அகாசி கடந்த 2003-ம் ஆண்டில் தனது 33 வயதில் நம்பர் ஒன் இடத்தை பிடித்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது.

2004-ம் ஆண்டில் பெடரர் முதல்முறையாக நம்பர் ஒன் அரியணையை அலங்கரித்தார். அது முதல் 2008-ம் ஆண்டு வரை அவர் 237 வாரங்கள் தொடர்ச்சியாக முதலிடத்தை ஆக்கிரமித்தார். பெடரர் மொத்தத்தில் 302 வாரங்கள் முதலிடத்தில் இருந்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். 2012-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு பெடரர் தற்போது தான் முதலிடத்தை பிடித்துள்ளார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), ரபெல் நடால் (ஸ்பெயின்), ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) ஆகியோர் நம்பர் ஒன் இடத்தில் இருந்துள்ளனர்.

முதலிடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (9,760 புள்ளிகள்) 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். கனடா வீரர் மரின் சிலிச் (4,960 புள்ளிகள்) 3-வது இடத்தில் நீடிக்கிறார். பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் ஒரு இடம் முன்னேற்றம் கண்டு 4-வது இடத்தையும், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்ரேவ் ஒரு இடம் சறுக்கி 5-வது இடத்தையும் பெற்றுள்ளனர். டோமினிச் திம் (ஆஸ்திரியா) 6-வது இடத்திலும், டேவிட் கோபின் (பெல்ஜியம்) 7-வது இடத்திலும், ஜாக் சோக் (அமெரிக்கா) 8-வது இடத்திலும் நீடிக்கின்றனர். தென்ஆப்பிரிக்கா வீரர் கெவின் ஆண்டர்சன் 2 இடம் முன்னேறி 9-வது இடத்தையும், அர்ஜென்டினா வீரர் ஜூயன் மார்ட்டின் டெல்போர்டோ ஒரு இடம் சரிந்து 10-வது இடத்தையும் பிடித்தனர். சென்னை ஓபன் சேலஞ்சர்ஸ் போட்டியில் இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்ட இந்திய வீரர் யுகி பாம்ப்ரி 11 இடம் ஏற்றம் கண்டு 101-வது இடம் பிடித்துள்ளார்.

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி (8,010 புள்ளிகள்) முதலிடத்திலும், ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் (7,965 புள்ளிகள்) 2-வது இடத்திலும் தொடருகின்றனர். ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா ஒரு இடம் முன்னேற்றம் கண்டு 3-வது இடத்தையும், உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா ஒரு இடம் சறுக்கி 4-வது இடத்தையும் பெற்றுள்ளனர். கரோலினா பிலிஸ்கோவா (செக் குடியரசு), ஆஸ்டாபென்கோ (லாத்வியா), கரோலின் கார்சியா (பிரான்ஸ்), வீனஸ் வில்லியம்ஸ் (அமெரிக்கா), ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) முறையே 5 முதல் 9 இடங்களில் தொடருகின்றனர். செக் குடியரசு வீராங்கனை கிவிடோவா ஒரு இடம் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார்.

மேலும் செய்திகள்