டென்னிஸ் வீரர் பெடரருக்கு இரட்டை விருது

ஆண்டு முழுவதும் விளையாட்டு உலகில் ஆதிக்கம் செலுத்தி சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு லாரெஸ் உலக ஸ்போர்ட்ஸ் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

Update: 2018-02-28 21:08 GMT

மொனாக்கோ,

ஆண்டு முழுவதும் விளையாட்டு உலகில் ஆதிக்கம் செலுத்தி சாதனை படைக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு லாரெஸ் உலக ஸ்போர்ட்ஸ் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா மொனாக்கோவில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தட்டிச்சென்றார். அத்துடன் கால் முட்டியில் காயம், ஆட்டத்தில் தொய்வு என்று சரிவை சந்தித்து வந்த அவர் மறுபடியும் எழுச்சி பெற்று டென்னிஸ் உலகை கலக்கி வருவதற்கும் ஒரு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

இந்த இரட்டை விருதையும் சேர்த்து பெடரர் இதுவரை 6 லாரெஸ் விருதை சொந்தமாக்கினார். 20 கிராண்ட்ஸ்லாம் கைப்பற்றிய சாதனையாளரான 36 வயதான பெடரர் கூறுகையில், ‘இது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தருணமாகும். மதிப்பு மிக்க இந்த விருதை இன்னொரு முறை பெற்றது அற்புதமான அனுபவம் ஆகும். ஆனால் இரண்டு விருது பெற்றது உண்மையிலேயே வித்தியாசமான கவுரவமாகும். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இதற்காக லாரியாஸ் அகாடமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார். லாரெஸ் விருது 2000–ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கவுரவத்தை அதிக முறை பெற்றவர் பெடரர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்