குழந்தை பெற்ற பின் முதன்முறையாக டாப் 10ல் இடம் பிடித்த செரீனா வில்லியம்ஸ்

குழந்தை பெற்று கொண்ட பின் முதன்முறையாக டபிள்யூ.டி.ஏ. தரவரிசை பட்டியலில் செரீனா வில்லியம்ஸ் டாப் 10ல் இடம் பிடித்துள்ளார்.

Update: 2019-02-19 10:57 GMT
வாஷிங்டன்,

டென்னிஸ் விளையாட்டில் கிராண்ட்ஸ்லாம் பட்ட போட்டிகளில் 23 முறை சாம்பியனான டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் (வயது 37).  அமெரிக்காவை சேர்ந்த இவர் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் பட்ட போட்டியில் வெற்றி பெற்றார்.  அவர் அப்பொழுது கர்ப்பகால தொடக்கத்தில் இருந்துள்ளார்.

இதனால் தொடர்ந்து போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்துள்ளார்.  இந்நிலையில், 2017 செப்டம்பரில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

போட்டிகளில் தொடர்ந்து விளையாடாத நிலையில் தரவரிசையில் அவர் 491வது இடத்தில் இருந்துள்ளார்.  இதன்பின் 2018ம் ஆண்டு மார்ச்சில் இந்தியன் வெல்சில் நடந்த டென்னிஸ் போட்டியில் அவர் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் டபிள்யூ.டி.ஏ. சமீபத்தில் வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் செரீனா வில்லியம்ஸ் மீண்டும் டாப் 10ல் இடம் பிடித்துள்ளார்.  அவர் 10வது இடத்தில் உள்ளார்.

இந்த பட்டியலில் ஜப்பானின் நவோமி ஒசாகா முதல் இடத்தில் உள்ளார்.  கடந்த 2018ம் ஆண்டில் அமெரிக்க ஓபன் இறுதி போட்டியில் வில்லியம்சை வீழ்த்தியவர் ஒசாகா.  இதேபோன்று கடந்த ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் பட்ட போட்டியிலும் அவர் வென்றுள்ளார்.

ருமேனியாவை சேர்ந்த சிமோனா ஹேலப் மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஸ்லோவேன் ஸ்டீபன்ஸ் ஆகியோர் ஓரிடம் முன்னேறி முறையே 2வது மற்றும் 3வது இடங்களை பிடித்துள்ளனர்.  செக் குடியரசு நாட்டை சேர்ந்த பெட்ரா கிவிடோவா ஓரிடம் பின்தங்கி பட்டியலில் 4வது இடத்திற்கு சென்று உள்ளார்.

மேலும் செய்திகள்