டென்னிஸ் தரவரிசையில் சாதனை: ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்தார், ஆஷ்லி பார்டி

பர்மிங்காம் கிளாசிக் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடந்து வந்தது.

Update: 2019-06-23 22:30 GMT

பர்மிங்காம்,

பர்மிங்காம் கிளாசிக் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் 2–ம் நிலை வீராங்கனையான ஆஷ்லி பார்டி (ஆஸ்திரேலியா) 6–3, 7–5 என்ற நேர் செட்டில் கணக்கில் ஜூலியா கோர்ஜசை (ஜெர்மனி) தோற்கடித்து மகுடம் சூடினார். பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான 23 வயதான ஆஷ்லி பார்டி இந்த வெற்றியின் மூலம் பெண்கள் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். இன்று வெளியாகும் புதிய தரவரிசை பட்டியலில் அதிகாரபூர்வமாக அவர் நம்பர் ஒன் அரியணையில் அமருகிறார். இதுவரை முதலிடத்தில் இருந்த ஜப்பானின் நவோமி ஒசாகா 2–வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

பெண்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஒருவர் நம்பர் ஒன் இடத்தை பிடிப்பது கடந்த 43 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். கடைசியாக 1976–ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் இவோன் கூலாகோங் முதலிடத்தில் இருந்தார். ஒட்டுமொத்தத்தில் ‘நம்பர் ஒன்’ இடத்தை அலங்கரிக்கும் 27–வது வீராங்கனை ஆஷ்லி பார்டி ஆவார்.

மேலும் செய்திகள்