தேசிய சீனியர் டென்னிஸ்: தமிழக வீரர் விஜய் கண்ணன் ‘சாம்பியன்’

தேசிய சீனியர் டென்னிஸ் போட்டியில், தமிழக வீரர் விஜய் கண்ணன் ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்.

Update: 2020-01-25 23:13 GMT
சென்னை,

மயிலாப்பூர் கிளப் சார்பில் டி.எஸ்.சந்தானம் நினைவு 14-வது தேசிய சீனியர்ஸ் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடந்தது. இதில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் தமிழக வீரர் விஜய் கண்ணன் 6-0, 6-0 என்ற நேர்செட்டில் சக வீரர் ஸ்ரீநாத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் விஜய் கண்ணன்-ராஜேஷ் இணை முதலிடத்தை பிடித்தது. 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஒற்றையர் இறுதிப்போட்டியில் மராட்டிய வீரர் நிதின் கிர்தானே 6-0, 6-1 என்ற நேர்செட்டில் கர்நாடக வீரர் சுரேஷ் பாலை சாய்த்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இதன் இரட்டையர் பிரிவில் நிதின் கிர்தானே (மராட்டியம்)-காதர் ரமீஸ் சமத் (தமிழ்நாடு) ஜோடி முதலிடத்தை பெற்றது. 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான ஒற்றையர் இறுதிப்போட்டியில் கர்நாடக வீரர் நாகராஜ் 6-1, 6-3 என்ற நேர்செட்டில் தமிழக வீரர் நிர்மலை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார். இதன் இரட்டையர் பிரிவில் நாகராஜ் (கர்நாடகா)-கார்த்திக் கைலாஷ் (தமிழ்நாடு) ஜோடி முதலிடம் பிடித்தது. 65 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோவிந்த் கிருஷ்ணகுமார் 6-2, 6-3 என்ற நேர்செட்டில் சக வீரர் ஸ்ரீனிவாசனை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இதன் இரட்டையர் பிரிவில் தமிழகத்தின் கோவிந்த் கிருஷ்ணகுமார்-கணேசன் இணை முதலிடம் பிடித்தது.

பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் விஜய் அமிர்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். மயிலாப்பூர் கிளப் தலைவர் பிரமிட் நடராஜன், பிரேக்ஸ் இந்தியா நிறுவன நிர்வாகி விஜி சந்தானம், வீல்ஸ் இந்தியா நிறுவன நிர்வாகி ராம் சந்தானம் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்