சர்வதேச டென்னிசில் இருந்து விடைபெற்றார், மரிய ஷரபோவா

சர்வதேச டென்னிசில் இருந்து மரிய ஷரபோவா விடைபெற்றார்.

Update: 2020-02-27 00:12 GMT
பாரீஸ்,

உலகின் சிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவராக வலம் வந்த ‘ரஷிய புயல்’ மரிய ஷரபோவா சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான 32 வயதான ஷரபோவா 5 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளர் ஆவார்.



 


2004-ம் ஆண்டு ஷரபோவா தனது 17-வது வயதில் செரீனா வில்லியம்சை நேர் செட்டில் தோற்கடித்து விம்பிள்டன் பட்டத்தை வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு அமெரிக்க ஓபனிலும், 2008-ல் ஆஸ்திரேலிய ஓபனிலும், 2012 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் பிரெஞ்ச் ஓபனிலும் மகுடம் சூடினார். விளம்பர படங்களிலும், டென்னிசிலும் கொடிகட்டி பறந்த ஷரபோவா அதிக வருவாய் ஈட்டும் வீராங்கனையாக அடையாளம் காணப்பட்டார்.

தோள்பட்டை காயத்தால் அடிக்கடி அவதிப்பட்ட ஷரபோவா 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின் போது ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதய நோய் பிரச்சினைக்காக சாப்பிட்ட மருந்து, தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து பட்டியலில் இருந்ததை கவனிக்கவில்லை என்று விளக்கம் அளித்தார். இருப்பினும் அவருக்கு 15 மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. தடை காலம் முடிந்து 2017-ம் ஆண்டில் அவர் மறுபிரவேசம் செய்தாலும், அதன் பிறகு அவரால் டென்னிசில் ஜொலிக்க முடியவில்லை. சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபனில் களம் இறங்கிய அவர் முதல் சுற்றுடன் நடையை கட்டினார். தொடர்ச்சியான தோல்வி எதிரொலியாக தரவரிசையிலும் 373-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

தனது அழகு, நளினமான ஆட்டம் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த ஷரபோவா கூறுகையில், ‘என்னுடைய வாழ்க்கையை டென்னிஸ் விளையாட்டுக்காக அர்ப்பணித்தேன். அந்த டென்னிஸ் எனக்கு வாழ்க்கையை கொடுத்தது. ‘குட்பை’ சொல்வதன் மூலம் டென்னிசையும், நாள்தோறும் மேற்கொள்ளும் பயிற்சி முறைகள், முதல் பந்தை அடிக்கும் தருணம், பயிற்சியாளர் குழுவினர் என்று எல்லோரையும் இழக்கிறேன்.

டென்னிசில் எனது வெற்றிக்கு முக்கிய காரணம் என்னவென்றால் நான் ஒரு போதும் பின்னோக்கி பார்த்ததில்லை. முன்னோக்கியும் பார்த்ததில்லை. தொடர்ந்து முயற்சி செய்தால் உயர்ந்த இடத்துக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டேன்’ என்றார்.

மேலும் செய்திகள்