‘பெண்களை கவனச்சிதறலாக பார்ப்பது அர்த்தமற்றது’ - சானியா மிர்சா வேதனை

பெண்களை கவனச்சிதறலாக பார்ப்பது அர்த்தமற்றது என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா வேதனை தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-07 23:30 GMT
புதுடெல்லி, 

இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ், மந்தனா ஆகியோருடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாடுகையில் கூறியதாவது:-

‘இந்த ஆண்டு நடந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி வீராங்கனை அலிசா ஹீலியின் ஆட்டத்தை நேரில் பார்க்க அவரது கணவரும், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளருமான மிட்செல் ஸ்டார்க் சென்று இருந்ததை எல்லோரும் பாராட்டினார்கள். ஆனால் அதுபோல் நமது கண்டத்தில் நடந்து இருந்தால் பொண்டாட்டி தாசன் என சொல்லி இருப்பார்கள் என்று நான் வேடிக்கையாக தான் டுவிட்டரில் குறிப்பிட்டேன். இந்த பிரச்சினையில் என்னையும், அனுஷ்கா சர்மாவையும் (விராட்கோலி மனைவி) விட வேறு யாருக்கும் அதிகம் தொடர்பு இருக்க முடியாது. எங்கள் கணவர்கள் சிறப்பாக செயல்படுகையில், அதற்கு அவர்கள் தான் காரணம் என்றும், அதேநேரத்தில் அவர்கள் மோசமாக செயல்பட்டால் அதற்கு நாங்கள் தான் காரணம் என்று சொல்லும் கருத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாங்கள் இதனை நகைச்சுவைக்காக தான் கூறுகிறோம். ஆனாலும் இதில் ஆழமான பிரச்சினை இருப்பதாக நான் நினைக்கிறேன். அந்த ஆழமான பிரச்சினை என்னவென்றால் பெண்கள் எப்பொழுதும் ஒரு கவனச்சிதறலாக தான் பார்க்கப்படுகிறார்கள். பலமாக பார்க்கப்படுவதில்லை. இது நாம் சந்திக்க வேண்டிய ஒரு கலாசார பிரச்சினையாகும். உங்களுடன் மனைவி அல்லது காதலி இருப்பதால் கவனச்சிதறல் ஏற்படும் என்று சொல்வதில் எந்தவித அர்த்தமும் இல்லை’.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்