அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து நடப்பு சாம்பியன் பியான்கா விலகல்

அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து நடப்பு சாம்பியன் பியான்கா விலகினார்.

Update: 2020-08-15 00:21 GMT
நியூயார்க், 

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வருகிற 31-ந் தேதி முதல் செப்டம்பர் 13-ந் தேதி வரை நடக்கிறது. கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் அரங்கேறும் இந்த போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. கடந்த ஆண்டு செரீனா வில்லியம்சை வீழ்த்தி அமெரிக்க ஓபனில் மகுடம் சூடி அசத்திய 20 வயதான கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸ்கு, இந்த முறை போட்டியில் இருந்து திடீரென விலகி இருக்கிறார். 

முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துக்கு பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்காமல் இருந்து வந்த பியான்கா முழு உடல் தகுதியை எட்டாததால் இந்த முடிவை எடுத்து இருப்பதாக தெரிகிறது. 

தரவரிசையில் 6-வது இடம் வகிக்கும் பியான்கா கூறுகையில் ‘அமெரிக்க ஓபனை தவற விடுவது என எடுத்த முடிவு மிகவும் கடினமானதாகும். என்னுடைய உடல் தகுதியில் கவனம் செலுத்துவதற்காகவும், களம் திரும்பும் போது உயர்தரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதை உறுதி செய்யும் நோக்கிலும் இந்த இந்த முடிவை மேற்கொண்டுள்ளேன்’ என்றார். 

ஆண்கள் பிரிவில் ஏற்கனவே நடப்பு சாம்பியன் ரபெல் நடால் (ஸ்பெயின்) கொரோனா அச்சத்தால் விலகி விட்டார். இதனால் இந்த ஆண்டு நடப்பு சாம்பியன்கள் இல்லாமல் அமெரிக்க ஓபன் டென்னிஸ் நடக்க இருக்கிறது.

மேலும் செய்திகள்