உலக டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முடிவில் உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது.

Update: 2020-10-12 23:15 GMT
பாரீஸ், 

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முடிவில் உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்ட செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் (11,740 புள்ளி) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (9,850 புள்ளி) 2-வது இடத்திலும், கால்இறுதியில் தோல்வி அடைந்த ஆஸ்திரியாவின் டொமினிக் திம் (9,125 புள்ளி) 3-வது இடத்திலும், காயம் காரணமாக போட்டியில் பங்கேற்காத சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (6,630 புள்ளி) 4-வது இடத்தில் மாற்றமின்றி தொடருகின்றனர். அரைஇறுதிக்கு முன்னேறிய கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் ஒரு இடம் ஏற்றம் கண்டு 5-வது இடத்தையும், ரஷியாவின் டேனில் மெட்விடேவ் ஒரு இடம் சரிந்து 6-வது இடத்தையும் பெற்றுள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா), சிமோனா ஹாலெப் (ருமேனியா), நவோமி ஒசாகா (ஜப்பான்) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் நீடிக்கின்றனர். இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த அமெரிக்க வீராங்கனை சோபியா கெனின் 2 இடம் முன்னேறி 4-வது இடத்தை பிடித்துள்ளார். உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா 5-வது இடத்தில் தொடருகிறார். செக்குடியரசு வீராங்கனை பிளிஸ்கோவா 2 இடம் சரிந்து 6-வது இடத்தை பெற்றுள்ளார். பிரெஞ்ச் ஓபனை வென்று கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டத்தை உச்சி முகர்ந்த முதல் போலந்து வீராங்கனை என்ற சாதனையை படைத்த 19 வயதான இகா ஸ்வியாடெக் அதிரடியாக 54-வது இடத்தில் இருந்து 17-வது இடத்துக்கு உயர்ந்து இருக்கிறார்.

மேலும் செய்திகள்