காயம் காரணமாக கூடுதல் நேரம் கிடைக்கும் - ரோஜர் பெடரர்

மெல்போர்னில் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரைஇறுதியில் செர்பியா வீரர் ஜோகோவிச்சிடம் தோல்வி கண்ட பிறகு சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் காயம் காரணமாக எந்தவொரு போட்டியிலும் ஆடவில்லை.

Update: 2020-12-14 22:30 GMT
இடது முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து இருக்கும் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான பெடரர் இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை. சுவிட்சர்லாந்தின் சிறந்த வீரர் விருதை நேற்று முன்தினம் பெற்ற பெடரர் அளித்த ஒரு பேட்டியில், ‘கடந்த அக்டோபர் மாதத்துக்குள் முழு உடல் தகுதியை எட்டிவிடலாம் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் இன்னும் முழு உடல் தகுதியை பெறவில்லை. ஆஸ்திரேலிய ஓபன் போட்டி கடினமானதாகவே இருக்கும். கடந்த 6 மாதங்களாக எனது உடல் தகுதியில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. உடல் தகுதிக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறேன். அடுத்த 2 மாதம் எப்படி அமையும், டென்னிஸ் களத்தில் எப்படி செயல்பட போகிறேன் என்பதை பார்க்கலாம். ஒருவேளை ஆஸ்திரேலிய ஓபன் போட்டி ஜனவரி மாதத்தில் இருந்து பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிப்போகுமா? என்பதை ஆவலுடன் பார்க்கிறேன். அப்படி தள்ளிப்போனால் நிச்சயமாக இந்த போட்டிக்கு தயாராக கூடுதல் நேரம் கிடைக்கும்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்