மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: ஆஷ்லி பார்ட்டியை வீழ்த்தி சபலென்கா ‘சாம்பியன்’

ஸ்பெயினில் நடந்த மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டிக்கு அதிர்ச்சி அளித்து சபலென்கா சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கினார்.

Update: 2021-05-09 23:29 GMT
மாட்ரிட், 

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்தது. களிமண் தரை போட்டியான இதில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டியும், 7-ம் நிலை வீராங்கனை அரினா சபலென்காவும் (பெலாரஸ்) மோதினர்.

இதில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய சபலென்கா, முதல் செட்டில் ஒரு கேமை கூட (6-0) இழக்காமல் அசத்தினார். ஒரு செட்டில் ஆஷ்லி பார்ட்டி ஒரு கேம் கூட வெல்லாதது கடந்த 4 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இதன் பின்னர் 2-வது செட்டை கைப்பற்றி மீண்ட ஆஷ்லி, கடைசி செட்டில் சபலென்காவின் ஆக்ரோஷத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பணிந்தார்.

1 மணி 39 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் சபலென்கா 6-0, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வாகை சூடி பட்டத்தை வசப்படுத்தினார். இதன் மூலம் 2 வாரத்துக்கு முன்பு ஜெர்மனியில் நடந்த ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் இறுதி ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு சபலென்கா பழிதீர்த்துக் கொண்டார். அத்துடன் களிமண் தரை ஆடுகளத்தில் தொடர்ச்சியாக 16 ஆட்டங்களில் வென்றிருந்த ஆஷ்லியின் வீறுநடையும் முடிவுக்கு வந்தது.

23 வயதான சபலென்கா கூறுகையில், ‘உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு பிறகு காயத்தால் அவதிப்பட்டேன். இதனால் மாட்ரிட் ஓபனில் இருந்து விலகலாம் என்று நினைத்தேன். ஆனால் அதன் பிறகு 4 நாட்களில் காயத்தில் இருந்து வேகமாக குணமடைந்ததால் களம் திரும்பி இப்போது சாம்பியனாக நிற்கிறேன். இது எனக்கு வியப்புக்குரிய வாரமாக அமைந்தது’ என்றார்.

இது சபலென்காவுக்கு 10-வது சர்வதேச பட்டமாகும். அதே சமயம் களிமண் தரை போட்டியில் அவருக்கு இது முதல் மகுடமாகும். அவருக்கு ரூ.2 கோடியே 81 லட்சம் பரிசுத்தொகையும், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன. இன்று வெளியாகும் புதிய தரவரிசையில் சபலென்கா 4-வது இடத்துக்கு முன்னேறுகிறார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். 2-வது இடம் பிடித்த ஆஷ்லி பார்ட்டிக்கு ரூ.1 கோடியே 68 லட்சம் கிடைத்தது.

மேலும் செய்திகள்