டென்னிஸ் வீராங்கனை ஓசாகாவுக்கு அபராதம்; பிரெஞ்ச் ஓபன் அதிகாரிகள் நடவடிக்கை

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் நடந்து வருகிறது.

Update: 2021-05-31 16:09 GMT

இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான ஜப்பானின் நவோமி ஒசாகா 6-4, 7-6 (7-4) என்ற நேர்செட்டில் ருமேனியா வீராங்கனை பாட்ரிசியா மரியா டிக்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டிக்கு பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நவோமி ஒசாகா கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதனை அடுத்து போட்டி அமைப்பு குழுவின் விதிமுறையை மதிக்காமல் நடந்து கொண்ட நவோமி ஒசாகாவுக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக பிரெஞ்ச் ஓபன் போட்டி அதிகாரி அறிவித்துள்ளார். மீடியாக்களை சந்திக்கும் தனது கடமையை ஒசாகா தொடர்ந்து தவிர்த்தால் போட்டியில் இருந்து நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரெஞ்ச் ஓபன் சமூக வலைதளத்தில் ஒசாகாவின் தவறை சுட்டிக்காட்டும் விதத்தில் ரபெல் நடால், நிஷிகோரி, சபலென்கா, கோகோ காப் ஆகியோர் மீடியாவை சந்திக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, அவர்கள் தங்கள் பணியை புரிந்து செயல்படுகிறார்கள் என்று பதிவிடப்பட்டு இருந்தது. இதற்கு முன்னாள் வீராங்கனைகள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து அந்த பதிவு உடனடியாக நீக்கப்பட்டது.

மேலும் செய்திகள்