ஆசிய மண்டலத்திற்கான ஒலிம்பிக் கோட்டா - இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னாவிற்கு வழங்க இந்திய டென்னிஸ் சம்மேளனம் பரிந்துரை

ஆசிய மண்டலத்திற்கான ஒலிம்பிக் கோட்டாவை அங்கிதா ரெய்னாவிற்கு வழங்க சர்வதேச டென்னிஸ் சங்கத்திற்கு இந்திய டென்னிஸ் சம்மேளனம் கடிதம் எழுதியுள்ளது.

Update: 2021-06-27 01:08 GMT
புதுடெல்லி,

பெண்கள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் உயர்ந்த தரவரிசை அல்லது கண்டத்திற்கான போட்டியில் வெற்றி ஆகியவற்றின் அடிப்படையில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற முடியும். இதன்படி 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றிய சீனாவின் வாங் குயாங், ஜாங் சூவாய் ஆகியோர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். 

இவர்களின் தரவரிசையும் தகுதி பெறுவதற்கு ஏற்ப உயர்ந்த நிலையில் (ஜூன் 14-ந்தேதி நிலவரப்படி 36 மற்றும் 38-வது இடம்) இருப்பதால் அந்த வகையிலும் நேரடியாக ஒலிம்பிக் வாய்ப்பை பெற முடியும். எனவே ஆசிய மண்டலத்திற்கான ஒலிம்பிக் கோட்டாவை ஆசிய விளையாட்டில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னாவுக்கு வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி இந்திய டென்னிஸ் சம்மேளனம், சர்வதேச டென்னிஸ் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளது. 

தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கம் வென்றவர்கள் தரவரிசை அடிப்படையில் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றால், கண்டத்திற்கான ஒலிம்பிக் கோட்டாவை அடுத்த நிலையில் உள்ளவருக்கு வழங்கலாம் என்பதை இந்திய டென்னிஸ் சம்மேளனம் சுட்டிகாட்டியுள்ளது. அங்கீதா ரெய்னா தரவரிசையில் 181-வது இடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்