அவர்தான் சிறப்பாக விளையாடினார்: ஆனால் எனக்கு அதிர்ஷ்டம் இருந்தது - ரோஜர் பெடரர்

மன்னாரினோதான் சிறப்பாக விளையாடினார் என்றும், ஆனால் எனக்கு தான் அதிர்ஷ்டம் இருந்தது என்றும் ரோஜர் பெடரர் தெரிவித்தார்.

Update: 2021-06-30 06:20 GMT
லண்டன், 

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பிரபல வீரர் ரோஜர் பெடரர், 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். லண்டனில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 41-வது இடத்தில் உள்ள பிரான்சை சேர்ந்த அட்ரியன் மன்னாரினோவை, பெடரர் எதிர்கொண்டார் 

எட்டு முறை விம்பிள்டன் பட்டங்களை வென்ற பெடரருக்கு, யாரும் எதிர்பாராதபடி மன்னாரினோ கடும் சவாலாக விளங்கினார். முதல் செட்டை பெடரர் 6-4 என்ற புள்ளிக்கணக்கில் வென்றாலும் அடுத்த இரு செட்களையும் 7-6 (3), 6-3 என்ற புள்ளிக்கணக்கில் மன்னாரினோ வென்று ஆச்சரியப்படுத்தினார்

எனினும் 4-வது செட்டை 6-2 என வென்றார் பெடரர். இதனால் கடைசி செட் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மன்னாரினோவுக்குக் காயம் ஏற்பட்டதால் போட்டியிலிருந்து விலகினார். இதனால் பெடரர் 2-வது சுற்றுக்கு முன்னேறினார். விளையாடும்போது நிலை தடுமாறி விழுந்ததால் மன்னாரினோவுக்குக் காயம் ஏற்பட்டது.

வெற்றி பெற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரோஜர் பெடரர் ஜாலியான மனநிலையில் இருந்தார். அப்போது பேசிய அவர், “இந்த ஆட்டத்தில் அட்ரியன் தான் வென்றிருக்கக் கூடும். அவர்தான் சிறப்பாக விளையாடினார். எனக்கு இன்று அதிர்ஷ்டம் இருந்தது” என்று பெடரர் கூறினார். மேலும் மன்னாரினோவுக்கு ஏற்பட்ட காயத்திற்காக பெடரர் வருத்தம் தெரிவித்தார். 





மேலும் செய்திகள்