பெடரருக்கு மீண்டும் ஆபரேஷன்

முன்னாள் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) கடந்த ஆண்டு கால்முட்டியில் ஏற்பட்ட காயத்துக்கு இரண்டு முறை ஆபரேஷன் செய்தார்.

Update: 2021-08-17 01:41 GMT
ஷூரிச்,

முன்னாள் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) கடந்த ஆண்டு கால்முட்டியில் ஏற்பட்ட காயத்துக்கு இரண்டு முறை ஆபரேஷன் செய்தார். அதன் பிறகு இந்த சீசனில் 5 போட்டித் தொடர்களில் பங்கேற்ற அவர் எந்த கோப்பையையும் வெல்லவில்லை. விம்பிள்டன் உள்ளிட்ட புல்தரை போட்டிகளில் தொடர்ந்து விளையாடியதால் மறுபடியும் கால்முட்டியில் காயம் ஏற்பட்டது. இதனால் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து பின்வாங்கினார்.

இந்த நிலையில் 40 வயதான பெடரர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘எனது கால்முட்டியை பரிசோதித்த டாக்டர்கள் மீண்டும் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதை செய்வதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்துள்ளேன். இதனால் பல மாதங்கள் என்னால் விளையாட முடியாது. நிச்சயம் இது கடினமாகத்தான் இருக்கப்போகிறது என்றாலும் இதைத் தவிர வேறு வழியில்லை. மீண்டும் நம்பிக்கை தரக்கூடிய வகையில், நல்ல நிலையில் களம் திரும்ப விரும்புகிறேன். அதற்கு இந்த ஆபரேஷன் அவசியமாகிறது ’ என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் வருகிற 30-ந்தேதி நியூயார்க்கில் தொடங்கும் அமெரிக்க ஓபனில் விளையாட முடியாது என்பதை 5 முறை சாம்பியனான பெடரர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

மேலும் செய்திகள்