ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரர் விலகல்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் இருந்து ரோஜர் பெடரர் விலகியுள்ளார்.

Update: 2021-11-17 19:37 GMT
சூரிச்,

முன்னாள் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரரும், 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளருமான ரோஜர் பெடரருக்கு (சுவிட்சர்லாந்து) கடந்த 2020-ம் ஆண்டில் வலது கால்முட்டியில் இரண்டு முறை ஆபரேஷன் செய்யப்பட்டது. காயத்தில் இருந்து குணமடைந்து 5 தொடர்களில் விளையாடிய அவர் எதிலும் வெற்றிபெறவில்லை. அதன் பிறகு மீண்டும் கால்முட்டியில் வலி ஏற்பட்டதால் ஜூலை மாதம் விம்பிள்டன் கால்இறுதியில் தோற்றதோடு எஞ்சிய சீசனில் இருந்து ஒதுங்கினார். 

டாக்டர்களின் ஆலோசனைப்படி கால்முட்டி பிரச்சினையில் இருந்து முழுமையாக விடுபடுவதற்கான பயிற்சி முறைகளை மேற்கொண்டுள்ளார். ஆனாலும் அவர் மறுபடியும் எப்போது களம் திரும்புவார் என்பது நிச்சயமற்ற ஒன்றாக இருக்கிறது.

இந்த நிலையில் 40 வயதான பெடரர் நேற்று அளித்த பேட்டியில், ‘அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் மெல்போர்னில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபனில் நான் பங்கேற்க வாய்ப்பே இல்லை. ஜனவரி மாதம் தான் என்னால் நன்கு ஓட முடியும். மார்ச் அல்லது ஏப்ரலில் மீண்டும் டென்னிஸ் பயிற்சியை தொடங்குவேன். லண்டனில் நடக்கும் விம்பிள்டனில் என்னால் ஆட முடிந்தால் நிச்சயம் ஆச்சரியமடைவேன். கடைசி முறையாக சாதிக்கும் அளவுக்கு செயல்பட வேண்டும் என்பது எனது லட்சியம். 

அது மட்டுமின்றி எனக்கே உரிய பாணியில் களத்தில் இருந்து விடைபெற வேண்டும் என்று விரும்புகிறேன். அதனால் தான் காயத்தில் இருந்து மீள்வதற்காக என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன்’ என்றார்.

மேலும் செய்திகள்