‘ஜோகோவிச்சுக்கு விதிமுறைகள் பற்றி பல மாதங்களுக்கு முன்னரே தெரியும்' - ரபேல் நடால் கருத்து

அவருக்கு விதிமுறைகள் பற்றி பல மாதங்களுக்கு முன்னரே தெரியும். அதனால் அவர் தன் முடிவை தானே எடுத்துக்கொண்டார்.

Update: 2022-01-06 08:42 GMT
மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 17-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று போட்டி அமைப்பு குழுவினரும், அந்த நாட்டு அரசாங்க அதிகாரிகளும் உத்தரவிட்டிருந்தனர். 

இந்த நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பேன் என செர்பியாவை சேர்ந்த உலகின் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் தெரிவித்திருந்தார்.

இதற்காக விமானம் மூலம் நேற்றிரவு மெல்போர்ன் விமான நிலையம் வந்தடைந்தார் நோவாக் ஜோக்கோவிச். ஆனால், அவருடைய விசா ரத்து செய்யப்பட்டது. அவர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளததால் விசா ரத்து செய்யப்பட்டது.  இதனால் அவர் மீண்டும் செர்பியா திரும்பினார். 

இந்த விவகாரம் டென்னிஸ் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ஜோகோவிச் பங்கேற்க முடியாமல் போனது குறித்து சக டென்னிஸ் வீரர் ரபேல் நடால் கருத்து தெரிவித்துள்ளர். அவர் கூறியிருப்பதாவது:-

“அவருக்கு நடந்ததை நினைத்து வருத்தம் கொள்கிறேன். ஆனால் அதே சமயம், அவருக்கு விதிகள் பற்றி பல மாதங்களுக்கு முன்னரே தெரியும். அதனால், அவர் தன் முடிவை தானே எடுத்துக்கொண்டார்.

இப்போது நடந்து கொண்டிருப்பது யாருக்கும்  நல்லதல்ல.நாம் அனைவரும் சவாலான சூழ்நிலையில் இருக்கிறோம். 

கொரோனா பெருந்தொற்றால் பல குடும்பங்கள் கடந்த 2 வருடங்களாக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மருத்துவம் பற்றி நன்கு அறிந்தவர்கள், ‘நாம் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியபடி நாம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

இதுவே என்னுடைய கண்ணோட்டம். 

நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன். நான் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். இதை நீங்கள் செய்தால், இங்கு விளையாட எந்த பிரச்சினையும் இல்லை.  

என்னுடைய பார்வையில், இந்த உலகம் விதிகளை பின்பற்றாததால் தவித்து வருகிறது.”

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்