ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட விருப்பம் - விசா வெற்றிக்குப் பிறகு ஜோகோவிச்

ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட விரும்புவதாக விசா வெற்றிக்குப் பிறகு ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-10 21:42 GMT
மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது. இதில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட வீரர், வீராங்கனைகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று போட்டி அமைப்பு குழுவும், ஆஸ்திரேலிய அரசும் அறிவித்து இருந்தது.

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரரும், 9 முறை ஆஸ்திரேலிய ஓபனை வென்றவரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்க கடந்த புதன்கிழமை இரவு விமானம் மூலம் மெல்போர்ன் சென்றடைந்தார். விமான நிலையத்தில் தடுக்கப்பட்ட அவருக்கு ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டதுடன், அவரது விசாவை ரத்து செய்து ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். 

கடந்த டிசம்பர் மாதத்தில் தான் கொரோனா பாதிப்புக்கு ஆளானதாகவும், அதனால் அடுத்த 6 மாதத்துக்கு தடுப்பூசி எதுவும் செலுத்த இயலாது என்ற விதிமுறையை காரணம் காட்டி அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மருத்துவ கமிட்டியிடம் இருந்து தான் மருத்துவ விதிவிலக்கு பெற்று இருப்பதாக ஆஸ்திரேலிய அரசு அதிகாரிகளிடம் ஜோகோவிச் எடுத்து கூறியதற்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை. 

விமான நிலையத்தில் பல மணி நேரம் முடக்கி வைக்கப்பட்டு இருந்த அவர் குடியுரிமை விதியை மீறுபவர்கள் அடைக்கப்படும் மெல்போர்னில் உள்ள ஓட்டலில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அவரது ரசிகர்கள் செர்பியா மற்றும் ஆஸ்திரேலியாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனது விசாவை ரத்து செய்ததற்கு எதிராகவும், திட்டமிட்டபடி ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்க தன்னை தடுப்பு காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ஜோகோவிச் தரப்பில் மெல்போர்னில் உள்ள பெடரல் கோர்ட்டில் அவசர வழக்கு தாக்கல் செய்ப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி அந்தோணி கெல்லி ஆன்-லைன் மூலம் நேற்று விசாரித்தார். ஜோகோவிச் தரப்பு வக்கீல் வாதாடுகையில் ‘ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் 2 பேர் கொண்ட மருத்துவ கமிட்டி அளித்த மருத்துவ விதிவிலக்கு சான்றிதழ் உள்பட அனைத்து ஆவணங்களையும் முறையாக சமர்ப்பித்தும் ஜோகோவிச் மீது நியாயமற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், அவர் வக்கீல்களுடன் கலந்து ஆலோசிக்க போதிய அவகாசம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டதும் கண்டு கொள்ளப்படவில்லை என்று குறிப்பிட்டார். 

‘ஜோகோவிச் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டார் என்று காரணம் காட்டி மருத்துவ விதிவிலக்கு பெற்றது தகுதியானது கிடையாது. அவர் சட்டத்துக்கு உட்பட்டு நியாயமாகவே நடத்தப்பட்டார்’ என்று அரசு தரப்பு வக்கீல் தனது வாதத்தில் முன்வைத்தார்.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, ‘மருத்துவ விதிவிலக்கு பெற்றதற்கான சான்றிதழ் உள்பட எல்லா ஆவணங்களையும் ஜோகோவிச் சமர்ப்பித்து இருக்கிறார். இதற்கு மேலும் அவர் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியதுடன், விசா ரத்து செய்யப்படுவதற்கு முன்பு அவர் வக்கீல்களுடன் கலந்து ஆலோசிக்க போதிய கால அவசாகம் அளிக்கப்படவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். 

அத்துடன் ஜோகோவிச்சின் விசா ரத்து நடவடிக்கையை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 30 நிமிடங்களுக்குள் அவரை தடுப்பு காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் ஆணை பிறப்பித்தார். இந்த உத்தரவு ஆஸ்திரேலிய அரசுக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

இதன் மூலம் 21-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் நோக்குடன் சென்று இருக்கும் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு பிரகாசமாகி இருக்கிறது. சட்டப் போராட்டத்தில் ஜோகோவிச் பெற்று இருக்கும் வெற்றியை அறிந்ததும் விசாரணை நடந்த கோர்ட்டு வளாகம் அருகில் திரண்டு இருந்த அவரது ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கலைந்து போக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஜோகோவிச்சுக்கு ஆதரவாக கோர்ட்டு அளித்த தீர்ப்பை தொடர்ந்து அவரது சொந்த நாடான செர்பியாவிலும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தும் விதமாக கொண்டாட்டத்தில் குதித்தனர்.

கோர்ட்டு தீர்ப்பு ஜோகோவிச்சுக்கு ஆதரவாக வந்து இருந்தாலும் இன்னும் இந்த பிரச்சினை முழுமையாக முடிந்து விடவில்லை. ‘ஆஸ்திரேலிய குடியேற்ற துறை மந்திரி தனது தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஜோகோவிச் விசாவை மீண்டும் ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கலாம்’ என்று அரசு வக்கீல் கிறிஸ்டோபர் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஜோகோவிச் நேற்று தனது டுவிட்டர் பதிவில், ‘எனது விசாவை ரத்து செய்து எடுத்த நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வளவு விஷயங்கள் நடந்தாலும் நான் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்க விரும்புகிறேன். அதில் நான் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன். அற்புதமான ரசிகர்களுக்கு முன்பு அரங்கேறும் முக்கியமான இந்த போட்டியில் விளையாடுவதற்காகவே இங்கு பயணித்தேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்