ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெண்கள் இரட்டையர் பிரிவில் இருந்து சானியா மிர்சா விலகல்

காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இருந்து விலகியிருந்த சானியா, தற்போது பெண்கள் இரட்டையர் பிரிவில் இருந்தும் விலகியுள்ளார்.

Update: 2020-01-23 11:00 GMT
மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை 33 வயதான சானியா மிர்சா, கலப்பு இரட்டையர் பிரிவு மற்றும் பெண்கள் இரட்டையர் பிரிவில் பங்கேற்றார்.

குழந்தை பேறு காரணமாக இரண்டு வருடங்களுக்கு மேல் சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்த சானியா மிர்சா, உக்ரைன் வீராங்கனை நாடியா கிச்செனோக்குடன் இணைந்து மகளிர் இரட்டையர் பிரிவில் ஹோபர்ட் கோப்பையை கடந்த வாரத்தில் கைப்பற்றினார்.

இந்நிலையில் வலது பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய வீரர் ரோஹன் போபண்ணாவுடன் பங்கேற்க இருந்த கலப்பு இரட்டையர் பிரிவில் இருந்து சானியா மிர்சா விலகினார். இந்த வலி ஓரளவு சரியாகி வருவதாக தெரிவித்திருந்த சானியா மிர்சா, இன்று நடைபெறும் பெண்கள் இரட்டையர் பிரிவில் களமிறங்கினார்.

முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா-உக்ரைனின் நாடியா கிச்செனோ ஜோடி, சீனாவின் ஜியுன் ஸின்யுன் ஹான்- லின் ஜூ ஜோடியை எதிர்கொண்டது. இதன் முதல் செட்டை 2-6 என சானியா ஜோடி இழந்தது. தொடர்ந்து நடந்த இரண்டாவது செட்டில் 1-0 என சானியா ஜோடி பின் தங்கியிருந்த நிலையில், காயம் காரணமாக சானியா மிர்சா விலகினார். இதையடுத்து சீனாவின் ஜியுன் ஹான், லின் ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியது.  

முன்னதாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இருந்து விலகியிருந்த சானியா, தற்போது பெண்கள் இரட்டையர் பிரிவில் இருந்தும் விலகியுள்ளார்.

மேலும் செய்திகள்