இந்த கஷ்டம் வேண்டாமே !

பறக்கும் படையினரால் வாகன சோதனை நடத்தப்படும் நிகழ்வுகள் பொதுமக்களுக்கும் குறிப்பாக வியாபாரிகளுக்கும் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-03-22 23:48 GMT

18-வது மக்களவை தேர்தல் நாள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகள் மத்திய அரசாங்கத்தை ஆளப்போவது யார்? என்பதை தேர்ந்தெடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். கடந்த 16-ந்தேதி தேர்தல் கமிஷன் தேர்தல் தேதியை அறிவித்துவிட்டது. ஏப்ரல் 19-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களில் தேர்தல் நடக்கிறது. தமிழ்நாட்டில் முதல் கட்ட தேதியான ஏப்ரல் 19-ந்தேதி, மொத்தம் உள்ள 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியிலுள்ள ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடக்கிறது. இதுமட்டுமல்லாமல், விஜயதரணி எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.

அனைத்து கட்சிகளும் தங்கள் கூட்டணி உடன்பாடுகளை முடித்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது. அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார்கள். வேட்பாளர்களும் ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நேரத்தில், பறக்கும் படையினரால் வாகன சோதனை நடத்தப்படும் நிகழ்வுகள் பொதுமக்களுக்கும் குறிப்பாக வியாபாரிகளுக்கும் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 16-ந்தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந்தேதி முடிந்தபிறகு 6-ந்தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும். இந்த கால கட்டத்தில், உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் யாரும் பணம் கொண்டுபோனால் வாகன சோதனை நடத்தும் அதிகாரிகள் பிடித்து விடுவார்கள். பிடிபடும் பணம் ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தால், அதை வருமான வரித்துறையிடம் ஒப்படைத்து விடுவார்கள். சில நேரங்களில் அமலாக்க பிரிவுக்கும் அனுப்பிவிடுவார்கள். சேலைகள், நகைகள் மற்றும் பொருட்களை கொண்டுபோகும் போதும் இந்த சிக்கல் இருக்கிறது.

இது திருமண சீசன். ஒரு பவுன் நகையே ரூ.50 ஆயிரத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. திருமணத்துக்கு 10 பவுன் நகை வாங்க சென்றாலும் ரூ.5 லட்சத்தை எடுத்து செல்ல வேண்டியது இருக்கிறது. அப்போதெல்லாம் எந்த ஆவணங்களை கையில் கொண்டுபோக முடியும்?. இதுபோல, சிறு வியாபாரிகள் என்றாலும் தினமும் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பொருட்களை கொள்முதல் செய்ய கொண்டு போவார்கள். கடையை மூடிவிட்டு வீட்டுக்கு செல்லும்போதும், பொருட்கள் விற்ற பணத்தை ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்வார்கள். விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்று வீட்டுக்கு பணத்தை கொண்டு போவார்கள்.

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் தினமும் விற்பனையாகும் பெட்ரோல்-டீசல் விற்பனை பணத்தை வங்கிக்கு எடுத்து செல்லும்போதும் வாகன சோதனைகளில் பல இடர்பாடுகளை சந்திக்க வேண்டியது இருக்கிறது. ரூ.50 ஆயிரம் உச்சவரம்பினால் அதற்கு மேல் கொண்டுபோகும் பொதுமக்கள், அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை அந்த இடத்திலேயே காட்ட முடியாததால், பணத்தை, பொருட்களை பறிமுதல் செய்து கொண்டு போய்விடுகிறார்கள். எனவே, பொதுமக்களின் இடர்பாடுகளை கருத்தில் கொண்டு, ரூ.50 ஆயிரம் உச்ச வரம்பில் சற்று மென்மையான போக்கை தேர்தல் கமிஷன் கையாள வேண்டும். அரசியல் கட்சிகளிடம் கண்டிப்பு காட்டுவதில் தவறில்லை. அதே கண்டிப்பை எங்களிடம் காட்ட வேண்டுமா?, ஏப்ரல் 19-ந்தேதி தேர்தல் முடிந்தாலும், ஜூன் 6-ந்தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்க வேண்டுமா? தேர்தல் முடிந்தவுடனேயே அதை திரும்பப் பெறலாமே என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்