காசி தமிழ் சங்கமம் 4.0

தமிழ்நாடு ஆசிரியர்கள் உத்தரபிரதேசம் சென்று அங்குள்ள மாணவர்களுக்கு தமிழ் கற்றுத்தர உள்ளனர்.;

Update:2025-12-02 04:30 IST

தமிழ்நாட்டுக்கும் காசிக்கும் சரித்திர காலந்தொட்டே நீண்ட நெடிய தொடர்பு இருக்கிறது. காசியில் போய், கங்கையில் நீராடினால் செய்த பாவம் எல்லாம் தீரும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும். ஆனால் காசிக்கு போகமுடியாத மக்களுக்காக, மன்னர் அதிவீர பராக்கிரம பாண்டியன் காசி விஸ்வநாதர் கோவிலை நிர்மாணித்து அந்த நகரத்துக்கு தென்காசி என்று பெயரிட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த கோவிலின் கோபுரத்துக்கு ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதை ஒருவர் எடுத்து கட்டுவார். அவர் பாதம் இப்போதே பணிகிறேன் என்று அதிவீர பராக்கிரம பாண்டியன் எழுதி வைத்த கல்வெட்டு இந்த கோவிலில் இன்னும் இருக்கிறது.

அதில், “ஆராயினும் இந்தத் தென்காசிமேவும் ஆலயத்து வாராததோர் குற்றம் வந்தால் அப்போது அங்கு வந்து அதனை நேராகவே யொழித்துப்புரப்பார்களை நீதியுடன் பாரார் அறியப் பணிந்தேன் பராக்கிரம பாண்டியனே” என்று கூறியிருக்கிறார். அவர் சொன்னதுபோல, பிற்காலத்தில் ஒரு மின்னல் தாக்கியதால் ராஜகோபுரம் பிளவுப்பட்டு, அதனை அப்படியே எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த ராஜகோபுரத்தை, மன்னர் பராக்கிரம பாண்டியன் எழுதி வைத்ததுபோல, தினத்தந்தி அதிபர் மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெரும் முயற்சி எடுத்து ஒன்பது நிலைகள் கொண்ட ராஜகோபுரத்தை கட்டி முடித்தார். இப்போது அங்கு காசிக்கு இணையான பூஜைகள் நடந்து வருகின்றன. காசிக்கும், தமிழகத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் மத்திய கல்வி அமைச்சகத்தின் சார்பில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சி, இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை காசியில் நடக்கிறது. அதனை பனராஸ் இந்து பல்கலைக்கழகமும், சென்னை ஐ.ஐ.டி.யும் இணைந்து நடத்துகின்றன. இந்த விழாவின் முக்கிய கருப்பொருள் ‘தமிழ் கற்கலாம்’, என்பதுதான். எனவே தமிழ் கற்கும் ஆர்வத்துடன் உத்தரபிரதேச மாணவர்கள் 10 குழுக்களாக 300 பேர் தமிழகம் வருகிறார்கள். அவர்கள் 17-ந்தேதியில் இருந்து 30-ந்தேதி வரை தமிழ்நாட்டில் அதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 9 கல்லுரிகளுக்கு சென்று தமிழ் கற்பார்கள். அதுமட்டுமல்லாமல் இந்தி-தமிழில் நிபுணத்துவம் பெற்ற 50 ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்திற்கு செல்கிறார்கள். அங்கு அவர்கள் 50 பள்ளிக்கூடங்களில் உள்ள 1,500 மாணவர்களுக்கு “பேச்சு தமிழை” 15 நாளில் கற்றுத்தர உள்ளனர்.

காசி சங்கமம் 4.0 குறித்து பிரதமர் மோடியும், மனதின் குரல் நிகழ்ச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசினார். அப்போது அவர், இந்த சங்கமம் தமிழை விரும்புபவர்களுக்கு மகத்துவம் வாய்ந்த மேடையாக உருவெடுத்து இருக்கிறது. உலகின் மிகப் பழமையான தமிழ்மொழி, தொன்மையான காசி நகரம் என்ற இந்த இரண்டின் சங்கமம் என்பது எப்போதுமே மிகவும் அற்புதமானதாக இருக்கும். தமிழ் கலாசாரமும், தமிழ் மொழியும் உயர்வானது. தமிழ், இந்தியாவின் பெருமிதம். காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக்கொள்ளும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கன்னியாகுமரியில் இருந்து முதல் குழு புறப்பட்டு சென்றிருக்கிறது. அங்கு நிகழ்ச்சி நடக்கும் 15 நாட்களிலும் தமிழ்மொழியின் சிறப்புகள் குறித்து பல்வேறு அமர்வுகள் நடப்பது மிகவும் சிறப்பானது. உத்தரபிரதேசத்தில் தமிழ் மணம் பரப்புவதற்கான வாசலை, இந்த காசி தமிழ் சங்கமம் திறந்து வைத்து இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்