ஆத்திர, அவசரத்துக்கு பிராவிடண்ட் பண்ட் நிதி
பிராவிடண்ட் பண்ட் நிதியில் 75 சதவீத தொகையை தொழிலாளர்கள் எடுத்துக்கொள்ளமுடியும்.;
தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டம் அதாவது ‘எம்ப்ளாயீஸ் பிராவிடண்ட் பண்ட்’ இருக்கிறது. அவர்களின் அடிப்படை சம்பளத்தில் ரூ.15 ஆயிரத்துக்கு 12 சதவீத தொகையை அந்த நிறுவனம் மாதந்தோறும் வழங்கும். அதுபோல தொழிலாளர்களும் 12 சதவீதமோ அல்லது அதற்கு அதிகமான தொகையையோ பிடித்துக்கொள்ள சொல்லலாம். இந்த 2 தொகைகளும் அரசு நிர்வகிக்கும் ஒரு நிதியில் சேர்த்து, வட்டியும் வழங்கும். இந்த வட்டித்தொகை ஆண்டுதோறும் மாற்றியமைக்கப்படுகிறது. இது இந்த ஆண்டு 8.25 சதவீதம் ஆக உள்ளது. தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, ஓய்வுபெறும் காலத்தில் அரசு ஊழியர்கள் போன்று மாதந்தோறும் அதிகமாக பென்ஷன் கிடைக்காது என்பதால் இந்த பிராவிடண்ட் பண்ட் தொகையும், அந்த நிறுவனம் ஓய்வுபெறும் நேரத்தில் கொடுக்கும் பணிக்கொடையும் மட்டுமே ஓய்வு காலத்தில் அவர்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.
இந்த பிராவிடண்ட் பண்ட் தொகையில் தொழிலாளர்களின் பங்களிப்பு தொகையை வட்டியுடன் முழுமையாக ஓய்வுபெறும் நேரத்தில் பெற்றுக்கொள்ளமுடியும். அதுபோல வேலை கொடுத்த நிறுவனங்களின் பங்களிப்பு தொகையில் ஒரு பகுதி நிறுத்தி வைக்கப்பட்டு மீதி தொகை வழங்கப்பட்டுவிடும். பிடித்து வைக்கப்பட்ட தொகையில் இருந்து மாதந்தோறும் ஒரு சிறு தொகை பிராவிடண்ட் பண்ட் பென்ஷனாக வழங்கப்படும்.
இதுதவிர அவசர செலவுகளுக்காக பணிபுரியும் நேரத்திலேயே ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை பெற்றுக்கொள்ளமுடியும். இந்த தொகை ஒவ்வொரு காரணத்துக்கும் வேறுபடும். அதாவது, வீடு கட்ட, கல்வி செலவு, திருமணம் மற்றும் சிறப்பு சூழ்நிலை என்று பல காரணங்களுக்காக வெவ்வேறு தொகைகளை பெறமுடியும். இதற்காக 13 காரணங்கள் வகைப்படுத்தப்பட்டிருந்தது.
இப்போது பிராவிடண்ட் பண்டில் பணம் எடுக்கும் நடைமுறை மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்த 13 காரணங்கள் 3 தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவம், கல்வி, திருமணம் போன்ற அத்தியாவசிய தேவைகள், வீட்டு தேவைகள் மற்றும் சிறப்பு தேவைகள் என்று இப்போது 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. முன்பு குறைந்தது 5 ஆண்டுகள் அல்லது 7 ஆண்டுகள் பணி முடித்த பிறகே இவ்வாறு பிராவிடண்ட் பண்ட் பணத்தை எடுக்க முடியும் என்ற விதி இப்போது ஒரு ஆண்டு பணி முடித்த பிறகே எடுக்க முடியும் என்று தளர்த்தப்பட்டுள்ளது. இதுபோல மிக முக்கியமாக ஊழியர்களின் பங்களிப்பு தொகையில் இருந்து மட்டுமே 50 முதல் 75 சதவீதம் வரை பங்களிப்பை எடுக்க முடிந்தது.
ஆனால் இப்போது தளர்த்தப்பட்ட விதிகளின்படி நிறுவனங்களின் பங்களிப்பையும் மற்றும் வட்டியையும் சேர்த்து ஊழியர்களின் பங்களிப்பையும் சேர்த்து மொத்த தொகையில் 75 சதவீத தொகையை எடுத்துக்கொள்ளமுடியும். இது தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். மிகவும் அவசிய நேரங்களில் வேறு எங்கும் போய், கடனுக்கு நிற்கவேண்டியது இல்லை. அவர்களின் பிராவிடண்ட் பண்ட் தொகையில் இருந்தே பெற்றுக்கொள்ளமுடியும். ஆனால் இதில் ஒரு பெரிய குறையும் இருக்கிறது. எளிதில் கிடைக்கிறது என்பதற்காக ஓய்வுநேர காவலனாக இருந்த பிராவிடண்ட் பண்ட் தொகையை பணியில் இருக்கும்போதே எடுத்துவிட்டு பணி ஓய்வுகாலத்தில் பணத்துக்கு கஷ்டப்படவேண்டிய நிலையும் ஏற்படும். ஆக விதிகளை தளர்த்தி எளிதில் பணம் கிடைக்க செய்துகொடுத்துள்ள வசதியால் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சாதகமும் இருக்கிறது, பாதகமும் இருக்கிறது.