உலக ஆக்கி போட்டியில் பெண் நடுவர்கள்!

உலக ஆக்கி போட்டியில் முதல் முறையாக நடுவர்களாக 4 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.;

Update:2025-12-04 04:50 IST

‘ஆணுக்கு பெண் இங்கே இளைப்பில்லை காண்’ என்று மகாகவி பாரதியார் அன்று பாடிய அவரது கனவின் வெளிப்பாடு, இப்போது எல்லா துறைகளிலும் நனவாக தொடங்கிவிட்டது. முப்படைகளிலும்கூட இப்போது பெண்கள் கோலோச்சுகிறார்கள். எல்லா வேலைகளிலும் பெண்கள் முடிசூடா ராணிகளாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் விளையாட்டில் அவர்கள் கால்தடம் பதிக்க சற்று காலதாமதம் ஆனது. ஒலிம்பிக்கில்கூட பெண்களுக்கு என பல விளையாட்டுகளில் தனிப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. விளையாட்டுத் துறையில் எப்படி ஆண்கள் வீரர்களாக இருக்கிறார்களோ, அதுபோல அனைத்து விளையாட்டுகளிலும் பெண்கள் வீராங்கனைகளாக இருக்கிறார்கள். ஆனால் நடுவர்களாக மட்டும் பெரும்பாலும் ஆண்களே இருந்தார்கள். ஏனெனில் விளையாட்டு வீரர்களாக இருந்துவிடலாம்.

நடுவர்களாக இருப்பதற்கு உடல் வலிமை அதிகம் தேவைப்படும். அதிலும் குறிப்பாக கால்பந்து, ஆக்கி போன்ற விளையாட்டுகளில் வீரர்களைவிட நடுவர்கள்தான் ஆட்டத்தை உன்னிப்பாக கவனித்துக்கொண்டே நாலாபுறமும் மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். விளையாட்டு சரியான முறையில் நடந்துக்கொண்டிருக்கிறதா? ஏதாவது தவறுகள் நடந்தால் அந்த தவறுக்கு எந்த வீரர் பொறுப்பு? முடிவுகள் துல்லியமாக மதிப்பிடப்படுகிறதா? என்பதையெல்லாம் பார்த்துக்கொண்டே ஓடவேண்டியது நடுவர்களுடைய பொறுப்புதான். அத்தகைய நடுவர்கள் பொறுப்பில் முதல் முறையாக கடந்த செப்டம்பர் 30-ந்தேதி முதல் நவம்பர் 2-ந்தேதி வரை இந்தியாவிலும், இலங்கையிலும் நடந்த உலக கோப்பைக்கான பெண்கள் கிரிக்கெட் போட்டியில் முழுக்க முழுக்க பெண் நடுவர்கள் இருந்தனர். 21 வயதுக்குட்பட்ட 14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கிப்போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் மதுரை ரேஸ்கோர்சில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்வதேச ஆக்கி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

தமிழகத்தில் முதல்முறையாக நடைபெறும் இந்த போட்டியில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்துவரும் சூழ்நிலையில், முதல் முறையாக நடுவர்களாக 4 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளது விளையாட்டு உலகத்தையே ஆச்சரியத்தில் பூரிப்படைய வைத்திருக்கிறது. மெக்சிகோவை சேர்ந்த ஆனா எஸ்கலென்ட், இந்தியாவை சேர்ந்த தீபா சென்னையில் நடக்கும் போட்டியிலும், சீனாவை சேர்ந்த லியா யாவோ மற்றும் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அனெலி சி ரோஸ்ட்ரான் மதுரையில் நடக்கும் போட்டியிலும் நடுவர்களாக வலம் வருகிறார்கள். இவர்கள் 4 பேருமே ஆக்கி வீராங்கனைகளாக இருந்தவர்கள். அதிலும் ஆனா எஸ்கலென்ட் 2 குழந்தைகளுக்கு தாய். ‘இது எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு மட்டும் இல்லை. மிகப்பெரிய பொறுப்பாகும்’ என ஆனா தெரிவித்தார்.

இந்திய பெண் நடுவரான தீபா, சென்னையை சேர்ந்தவர். இவர் இதுவரை ஆசியக் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளிலும், ஆசிய விளையாட்டு போட்டிகளிலும் நடுவராக பணிபுரிந்தாலும், உலகக் கோப்பைக்கான போட்டியில் இதுவே முதல் முறை. இது எனக்கு பெரிய சாதனை. என்னுடைய திறமையை நிரூபித்துக் காட்டுவேன் என்று கூறிய தீபா, ஆக்கி விளையாட்டு மைதானத்தில் நாங்கள்தான் தலைவர்கள், நுட்பமாக கவனித்து முடிவுகளை மிக வேகமாக எடுக்கவேண்டும் என்றார். ஆக உலக ஜூனியர் ஆக்கி போட்டியில் முதல்முறையாக பெண் நடுவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது சென்னையிலும், மதுரையிலும் நடக்கும் போட்டிகளுக்கு தனிச்சிறப்பாக அமைந்துள்ளது. வீரர்களின் வேகத்துக்கு மேலாக மின்னல் வேகத்தில் பெண் நடுவர்கள் இங்கும், அங்கும் 60 நிமிடங்கள் ஓடிக்கொண்டு முடிவுகள் எடுப்பதும், அவர்களின் விசில் சத்தம் கேட்பதும் நமது விளையாட்டு ரசிகர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்திருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்