‘தி ராஜா சாப்’ படத்திற்கு வந்த திடீர் சிக்கல்

நடிகர் பிரபாஸ் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் 'தி ராஜா சாப்' படத்தில் நடித்து வருகிறார்.;

Update:2025-08-14 11:33 IST

சென்னை,

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் பிரபாஸ். இவர் தற்போது, மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் 'தி ராஜா சாப்' படத்தில் நடித்து வருகிறார். பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தினை தயாரிக்கிறது.

இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தமன் இசையமைத்து வருகிறார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் 'தி ராஜா சாப்' படத்திற்கு திடீரென சிக்கல் வந்துள்ளது. இந்தப் படத்தை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் ஐவிஒய் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது. அதாவது, “ஒப்புக் கொள்ளப்பட்ட காலக்கெடுவுக்குள் படத்தை முடித்து வெளியிடுவது, நிதி எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில் வெளிப்படைத் தன்மை உள்பட பல்வேறு விஷயங்களில் பியூப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் ஒப்பந்தத்தை மீறிவிட்டது. இதனால் இந்தப் படத்துக்காக நாங்கள் முதலீடு செய்த ரூ.218 கோடியை 18 சதவிகித வட்டியுடன் தர உத்தரவிட வேண்டும்” என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால், ‘தி ராஜா சாப்’ படம் திட்டமிட்டபடி டிசம்பர் 5ம் தேதி வெளியாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்