"மாமன்" படத்திற்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு குறித்து சூரி உருக்கம்
சூரி நடித்த ‘மாமன்’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.;
சென்னை,
தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் நடிகர் சூரி. வெற்றி மாறன் இயக்கிய 'விடுதலை பாகம் 1' படத்தில் முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனை தொடர்ந்து, 'கருடன், கொட்டுக்காளி' , 'விடுதலை பாகம் 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக வெற்றிகளைக் குவித்தது. கொட்டுக்காளி படம் சர்வதேச நாடுகளில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் வெற்றிகளைக் குவித்தது.
இதற்கிடையில் இவர் விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மாமன்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை 'கருடன்' திரைப்படத்தை தயாரித்த லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
குடும்ப உறவுகளின் பின்னணியில் உருவாகியுள்ள மாமன் படத்தின் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனமான ஸ்ரீகுமரன் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
சூரியின் நடிப்பில் உருவான 'மாமன்' படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் 'மாமன்' படத்திற்கு ரசிகர்கள் அளித்த வரவேற்பு குறித்து நடிகர் சூரி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "என் அன்பான தங்கச்சீங்களும் தம்பீங்களும், நீங்க குடுத்த அன்பும் நம்பிக்கையும்தான் நான் சம்பாதிச்ச பெரிய பொக்கிஷம். 'மாமன்' படத்துக்கு நீங்க குடுத்த ஒவ்வொரு லைக், கமெண்ட்,சேர்-ம் எனக்கு சொல்ல முடியாத மோட்டிவேஷனா இருக்கு! உண்மையிலே இது சப்போர்ட் இல்ல, இது உங்க லவ் தான்!" என மிகவும் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.