மறைந்த அபிநய் குறித்து நடிகை விஜயலட்சுமியின் உருக்கமான பதிவு
நடிகர் அபிநய் உடல்நலக்குறைவால் நேற்று சென்னையில் காலமானார்.;
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர், அபிநய். அதனைத்தொடர்ந்து ஜங்ஷன், சிங்காரச் சென்னை, பொன்மேகலை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜய்யின் 'துப்பாக்கி' திரைப்படத்தில் வில்லனுக்கு இவர்தான் குரல் கொடுத்திருந்தார். கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அபினய், சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வந்தார். கல்லீரல் பாதிக்கப்பட்டு உடல்நலமும் குன்றி, ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ ‘சென்னை 28’ திரைப்படத்திற்குப் பின் நான் சாட்டிலைட் ரேடியோ விளம்பரத்தில் நடிகர் அபிநய்யுடன் இணைந்து நடித்தேன். அவர் அப்போது விளம்பர உலகில் நம்பர் 1 இடத்தில் இருந்தார். அந்த விளம்பரத்தின் படப்பிடிப்பை தில்லியில் 4 நாள்கள் நடத்தினர். தில்லியில் நான் தங்க அப்பார்ட்மெண்ட் ஒதுக்கப்பட்டது. என் அறையில் தங்க இன்னொரு ஆணாக அபிநய் வந்தார். அப்போது, நான் பெரோஸை காதலித்துக்கொண்டிருந்தேன். இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு ஆணுடன் ஒரே அறையில் தனியாகத் தங்குவதை பெரோஸிடம் சொல்லவில்லை.
அபிநய் தொழில் ஒழுக்கம்கொண்ட நேர்த்தியான ஆள். படப்பிடிப்பு முடிந்து இரவு அப்பார்ட்மெண்ட் நான் திரும்பும்போது அவர் தனியாக அமர்ந்துகொண்டு குடித்துக்கொண்டிருப்பார். ஒரு இளம் நடிகர் இப்படித் தனியாக குடித்துக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது மனம் மிகவும் கனமாக இருக்கும். அப்படியொரு நாள் இரவில், அவர் குடித்துக்கொண்டிருந்தபோது நான் அவரைப் பார்தது "ஏன் இப்படி குடிக்கிறீங்க...? நீங்க நன்றாக உழைக்கும் இளம் வெற்றியாளர். ஏன் இந்தப் பழக்கம்?" என்றேன்.அபிநய் தன் தனிப்பட்ட வாழ்க்கை, கடமைகள், தன் அம்மா, அழுத்தங்கள், வலிகள், தனிமை குறித்து 2 மணி நேரத்துக்கும் மேலாக பேசினார். அவர் இதயத்திலிருந்து எல்லாம் வெளியேறட்டும் என நான் எதுவும் சொல்லாமல் கவனமாக முழுமையாகக் கேட்டேன்.
படப்பிடிப்பு முடிந்து விமான நிலையத்திலிருந்து விடைபெறும்போது, அபிநய் என்னிடம், “நன்றி விஜி. இதற்கு முன் யாரும் என் வலிகளைக் குறித்து இவ்வளவு கேட்டதில்லை. கடவுள் இப்படியும் சில பெண்களைப் படைக்கிறாரா? ” என்றார். நான் சிரித்து, அவரைக் கட்டியணைத்து வழியனுப்பினேன். அதுவே, நாங்கள் சந்தித்துக்கொண்ட கடைசி சந்திப்பு.
அதன்பின், இப்போது இறந்துவிட்டார் எனக் கேள்விப்படுகிறேன். எனக்கு அழுகை வருகிறது. ஆனால், இது வருத்ததிற்கு அல்ல... மகிழ்ச்சியாக அவருடைய போராட்டம் முடிவிற்கு வந்ததை நினைத்து.. இறுதியாக தன் அமைதியைக் கண்டடைந்துவிட்டார். நான் அமைதியாக இளைபாருங்கள் எனச் சொல்ல மாட்டேன். சந்தோஷமாகக் கொண்டாடு, மச்சி என்றுதான் சொல்வேன். ஏனென்றால், இம்முறை தன் வலிகளை நினைத்து அவர் குடிக்க மாட்டார். தன் விடுதலையை ருசித்துக் குடிப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.
விஜயலட்சுமியின் இப்பதிவு ரசிகர்களிடமும் திரைத்துறையினரிடமும் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.