குழந்தைக்கு விஹான் கவுசல் என பெயர்... நடிகை கத்ரீனா கைப்-நடிகர் விக்கி கவுசல் தம்பதி அறிவிப்பு
நடிகை கத்ரீனா கைப் அடுத்து, டைகர் வெர்சஸ் பதான் படத்தில் நடிக்க உள்ளார்.;
புதுடெல்லி,
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களான ஷாருக் கான், ரன்பீர் கபூர், சல்மான் கான், ஹிருத்திக் ரோஷன், அமீர் கான் உள்ளிட்ட பலருடன் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கத்ரீனா கைப். பூம் என்ற திரைப்படத்தின் மூலம் 2003-ம் ஆண்டு இந்தி திரையுலகில் நுழைந்தவர் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.
இந்நிலையில், 2021-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் விக்கி கவுசலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2019-ம் ஆண்டு விருது வழங்கும் விழாவில் இரவு நேரத்தில் இவர்களின் முதல் சந்திப்பு நடந்தது. விருந்தினராக கத்ரீனாவும், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவராக விக்கியும் வந்திருந்தனர்.
இவர்களுடைய திருமணம் ராஜஸ்தானின் ஜெய்சல்மார் நகரில் சிறப்பாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னரும் கத்ரீனா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு நவம்பர் 7-ந்தேதி நடிகை கத்ரீனா கைப் மற்றும் விக்கி கவுசல் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில், அவர்கள் தங்களுடைய குழந்தைக்கு விஹான் கவுசல் என பெயர் சூட்டியுள்ளனர். இந்த தகவலை அவர்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். அதில், விஹானின் கைகளை இருவரும் பிடித்தபடி உள்ளனர்.
எங்கள் ஒளிக்கதிர் என கருப்பு நிற இருதயம் எமோஜியுடன் விஹான் கவுசல் என அவர்கள் சூட்டிய பெயரை பகிர்ந்து உள்ளனர். அவர்கள் இந்த செய்தியை பகிர்ந்ததும், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.
நடிகை கத்ரீனா கைப் அடுத்து, டைகர் வெர்சஸ் பதான் படத்தில் நடிக்க உள்ளார். அதற்காக தயாராகி வருகிறார். இதேபோன்று, சஞ்சய் லீலா பன்சாலியின் லவ் அண்டு வார் படத்தின் படப்பிடிப்பில் விக்கி பரபரப்பாக செயல்பட்டு வருகிறார்.