கார், பங்களா, பல கோடி சொத்துகள்; ஆனால்... வி.வி.ஐ.பி.யின் 3-வது மனைவியாக வேண்டும்: இளம் நடிகை பரபரப்பு பேட்டி
உடல்சார்ந்த வசீகரமும் இந்த விசயத்தில் தேவையாக உள்ளது. வாழ்க்கையில் அதுவும் முக்கியத்துவம் பெறுகிறது என கூறினார்.;
AI image
கோலாலம்பூர்,
திரை பிரபலங்கள் என்றால் பணம், புகழ் கிடைக்கும் என்பது பரவலாக தெரியும். ஆனால், திரைப்படத்தில் நடிக்கும் நடிகைகள் சமூகத்தில், வாழ்க்கையில் பல போராட்டங்களை எதிர்கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் பலராலும் அறியப்பட்ட திரை நட்சத்திரங்களாக இருந்தபோதும் பொதுவாழ்வில் பல துயரங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் காணப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள நடிகைகளும் இதுபோன்ற அனுபவங்களை சந்தித்தே வருகின்றனர்.
மலேசியாவை சேர்ந்த பிரபல நடிகை எமி நூர் தினிர் (வயது 29). இவர் நிருபர் ஒருவரிடம் அளித்த பேட்டி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவர் பேட்டியில் கூறும்போது, பொதுவாக பல கார்ப்பரேட் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, சமூகத்தில் செல்வாக்கான நபர்களிடம் இருந்து அடிக்கடி தொந்தரவுகள் வரும்.
பலரும் தன்னிடம் தொலைபேசி எண்களை கேட்டு வற்புறுத்துவார்கள். அல்லது சேர்ந்து வெளியே போகலாம் என அழைப்பார்கள். ஆனால், மற்றொரு நிகழ்வு ஒன்று நடந்தது. வி.வி.ஐ.பி. (அந்நாட்டில் சமூகத்திலும், பொருளாதாரத்திலும் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள தனி நபர்களை குறிக்க பொதுவாக வி.வி.ஐ.பி. என கூறுவர்) ஒருவரிடம் இருந்து வாய்ப்பு ஒன்று வந்தது.
அது படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு அல்ல. ஆனால், பணம், பொருள், சொத்துகள் கிடைக்கும் என தெரிவித்தனர் என்றார். இதன்படி, தினிரிடம் கார், பங்களா, 10 ஏக்கர் அளவிலான நிலம் (பல கோடி மதிப்பு கொண்ட சொத்துகள்) மாதம் ஒன்றிற்கு அந்நாட்டு கரன்சியின்படி ஆர்.எம்.50 ஆயிரம் (ரூ.11 லட்சம்) ஆகியவை தரப்படும்.
அதற்கு ஈடாக ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்த அந்த நபருக்கு 3-வது மனைவியாக வேண்டும் என கூறியுள்ளனர். இதனை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். அதுபற்றி அவரே கூறுகிறார். அந்த வாய்ப்பை உடனே நிராகரித்து விட்டேன். அவருக்கு என் தந்தையின் வயது இருக்கும். அப்போது எனக்கு 23 வயது இருக்கும். அழகி போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்தேன்.
அதற்காக வெளிநாடுகளுக்கு செல்ல கார்ப்பரேட் நிறுவனங்களின் விளம்பர உதவி தேவையாக இருந்தது. அதற்கு உதவ அந்த வி.வி.ஐ.பி. முன் வந்தபோதும், 3-வது மனைவியாக வேண்டும் என்று கட்டளையும் இட்டார். ஆனால், உன்னை நான் விற்க முடியாது என என்னுடைய தாயார் உறுதியாக கூறி விட்டார் என்கிறார்.
தினிர் கூறும்போது, வசதி படைத்த கணவர் கிடைக்கிறார் என்றால் அது போனஸ் போலத்தான் இருக்கும். அவர் இரும்பு மனிதர் போல் இருக்கிறார் என்றால் நான் சரி என கூறி இருப்பேன்.
ஆனால், அவர் ஒரு தாத்தா போன்று காணப்பட்டார் என்றார். உடல்சார்ந்த வசீகரமும் இந்த விசயத்தில் தேவையாக உள்ளது. வாழ்க்கையில் அதுவும் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வாய்ப்பை ஏற்று கொள்வது என்பது, ஒரு வசதி படைத்த வாழ்க்கைக்கான உத்தரவாதம் போன்று இருந்தது.
ஆனால், நான் விரும்பிய பாதை அதுவல்ல. சரியான முறையில் பணம் சேர்த்து பெற்றோரை கவனிக்க வேண்டும் என நான் விரும்பினேன் என்றார்.