கோவில் திருவிழாவில் நாய்க்குட்டியை வைத்து துலாபாரம் செலுத்திய நடிகையால் சர்ச்சை

பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் தன்னை மன்னிக்குமாறு நடிகை டீனா ஸ்ராவ்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.;

Update:2026-01-22 08:56 IST

நகரி,

சம்மக்கா சாரலம்மா ஜாதாரா அல்லது மேடாரம் ஜாதாரா என்பது தெலுங்கானா மாநிலத்தில் கொண்டாடப்படும் பெண் தெய்வங்களை கவுரவிக்கும் ஒரு பழங்குடி திருவிழாவாகும். அந்த மாநிலத்தின் முலுகு மாவட்டத்தின் அடர்ந்த காடுகளின் மையத்தில் உள்ள தத்வாய் மண்டலத்தின் மேடாரம் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேடாரம் ஜாதாரா திருவிழா நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான சம்மக்கா சாரலம்மா ஜாத்திரை திருவிழா அங்குள்ள கோவிலில் இம்மாதம் 28-ந் தேதி தொடங்கி 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் தங்களின் எடைக்கு எடையான வெல்லத்தை துலாபாரத்தில் அமர்ந்து காணிக்கையாக வழங்கி நேர்த்திக்கடன் செலுத்துவது பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், கமிட்டி குர்ரால்லு, ‘தி கிரேட் ப்ரீ வெட்டிங் ஷோ' உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை டீனா ஸ்ராவ்யா, சம்மக்கா சாரலம்மா தரிசனத்திற்காக நேற்று முன்தினம் மேடாரம் கிராமத்துக்கு வந்தார். அப்போது அவர் செலுத்திய காணிக்கை தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், ஒரு துலாபாரம் தராசில் நடிகை தனது வளர்ப்பு நாயை அமர்த்தி, மறுபுறம் வெல்லத்தை வைத்து காணிக்கை செலுத்தியவாறு காட்சி பதிவாகியுள்ளது. இந்த செயல் மூலம் பழங்குடியின மக்கள் தேவதைகளாக வழிபடும் சம்மக்கா சாரலம்மாவை நடிகை டீனா ஸ்ராவ்யா, அவமதித்து விட்டதாக கூறி சமூக வலைதளங்களில் பக்தர்கள் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் ஸ்ராவ்யா விளக்கம் அளித்தார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது செல்ல நாய் சமீபத்தில் நோய்வாய்ப்பட்டதால், அதன் உடல்நிலை மோசமடைந்தால் துலாபாரம் கொடுப்பதாக வேண்டிக்கொண்டேன். பக்தியின் காரணமாக அந்த வேண்டுதலை நிறைவேற்றியதாகவும், பழங்குடி மரபுகளை அவமதிக்கும் எண்ணம் தனக்கு இல்லை. எனினும் பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் தன்னை மன்னிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்