ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த 'தர்மதுரை' பட இயக்குனர்!
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய தர்மதுரை படம் வெளியாகி 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.;
சென்னை,
"தென்மேற்கு பருவக்காற்று, மாமனிதன், கூடல் நகர், கண்ணே கலைமானே" உள்ளிட்ட பல படங்களை ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் சீனு ராமசாமி. இவரது இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான படம் தர்மதுரை. இதில் விஜய் சேதுபதி மற்றும் தமன்னா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
மேலும், இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டங்கே, கஞ்சா கறுப்பு, ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் மக்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதிய எந்த பக்கம் பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது.
இந்த நிலையில், இப்படம் வெளியாகி நேற்றுடன் 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதனை முன்னிட்டு இயக்குனர் சீனு ராமசாமி ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,"நானே இதை மறந்து விட்டாலும் இதில் பங்கு பெற்றவர்கள் எல்லாம் நினைக்க நேரமில்லாமல் போனாலும் திரும்பத் திரும்ப மக்கள் மன்றத்தில் எங்களுக்கு புகழ் சேர்க்கும் தர்மதுரை வாழ்க. உண்மை படைப்பு வாழும் படைப்பாக மக்கள் மன்றத்தில் எந்நாளும் வாழும். நன்றி மக்களே" என்று பதிவிட்டுள்ளார்.