'ஜனநாயகன்' படத்துடன் மோதுகிறதா 'பராசக்தி'? - சுதா கொங்கரா சொன்ன பதில்
விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.;
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 'பராசக்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருகிறதாக கூறப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் இலங்கையில் நடைபெற்று நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு பணிகள் பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் விஜய்யின் கடைசிப் படமான 'ஜனநாயகன்' படமும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையில் 'ஜனநாயகன்' படத்துடன் 'பராசக்தி' மோத உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் சுதா கொங்கரா பேசுகையில், "சிவகார்த்திகேயன் கண்டிப்பாக இந்த கதாபாத்திரத்துக்கு பொருந்தக் கூடிய ஒரு நடிகர். ஆனால் ரவி மோகன் அவரது தன்மைக்கு முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை செய்கிறார். நிஜத்தில் அவர் அப்படி கிடையவே கிடையாது. அவர் மிகவும் அற்புதமான மனிதர். என்றார்.
மேலும், 'ஜனநாயகன்' படத்துடன் 'பராசக்தி' மோதுகிறதா என்று சுதா கொங்கராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இயக்குனர் இது "குறித்து எனக்கு தெரியாது. அதை தயாரிப்பாளர் தான் சொல்ல வேண்டும்" என்றார்.