“தியேட்டரில் காலி சீட்கள்.. ஆனால் வசூலில் மட்டும் பெரிய சாதனை” - கேள்வி எழுப்பிய சிம்ரன்
தியேட்டரில்மக்கள் கூட்டமே இல்லாமல், வசூலில் மட்டும் பெரிய சாதனை என்று சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது என்று சிம்ரன் கூறியிருக்கிறார்.;
சென்னை,
தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர், சிம்ரன். கடந்த சில வருடங்களாக ரஜினியுடன் ‘பேட்ட', அஜித்குமாருடன் ‘குட் பேட் அக்லி', ‘டூரிஸ்ட் பேமிலி' என்று தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் சிம்ரன் அளித்த பேட்டி ஒன்றில், "இந்த ஆண்டு வெளியானதில் ‘டூரிஸ்ட் பேமிலி', ‘டிராகன்', ‘3 பி.எச்.கே.' போன்ற படங்கள் நல்ல விமர்சனங்களைப் பெற்று, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன. இந்தப் படங்களை வெளியான ஒரு வாரம் கழித்து திரையரங்குகளுக்கு சென்றாலும், மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து காணப்பட்டது. ஆனால் மிகப் பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்களுக்கு சமூக வலைதளங்களில் பல கோடி வசூல் என்று அறிவிக்கிறார்கள். ஆனால் படம் வெளியான ஒரு வாரத்தில் திரையரங்குகளுக்குச் சென்றால், திரையரங்கு காலியாக கிடக்கிறது. மக்கள் கூட்டமே இல்லாமல், வசூலில் மட்டும் பெரிய சாதனை என்று எதை வைத்து மிகைப்படுத்தி சொல்கிறார்கள் என்ற ஆச்சரியம் எனக்கு எப்போதும் இருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.