சன்னி தியோலின் “பார்டர் 2” படத்திற்கு 6 அரபு நாடுகள் தடை
சன்னி தியோல் நடித்துள்ள ‘பார்டர் 2’ படம் முதல் நாளில் ரூ.32 கோடி வசூல் செய்துள்ளது.;
பாலிவுட் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய சினிமாவின் வரலாற்றிலும் முக்கிய இடத்தை பிடித்த ஒரு போர் சம்பந்தப்பட்ட படம் ‘பார்டர்’. ஜே.பி. தத்தா இயக்கிய இந்தப் படம் 1997-ல் வெளியானது.இதில், சன்னி தியோல், ஜாக்கி ஷெராப், அக்ஷய் கன்னா மற்றும் சுனில் ஷெட்டி போன்ற நட்சத்திரங்கள் நடித்தனர். ரூ. 10 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
தற்போது 28 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் 2-ம் பாகம் உருவாகி உள்ளது. இதில் சன்னி தியோலுடன், வருண் தவான், தில்ஜித் டோசன்ஜ் மற்றும் அஹான் ஷெட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அனுராக் சிங் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நேற்று வெளியானது.
இந்நிலையில், ‘பார்டர் 2’ படத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்கள் மற்றும் காட்சிகள் அதிகமாக இருப்பதாகக் கூறி பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, அரபு அமீரகம் உள்ளிட்ட 6 மத்திய கிழக்கு அரபு நாடுகள் இப்படத்திற்கு தடை விதித்துள்ளது. ஏற்கனவே இதே போன்ற காரணத்திற்காக கடந்த மாதம் வெளியான ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ திரைப்படமும் வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
‘பார்டர் 2’ படம் முதல் நாளில் ரூ.32 கோடி வசூல் செய்துள்ளது. வளைகுடா நாடுகளில் இந்தியத் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய சந்தை உள்ளது. படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், படத்தின் வசூல் ரீதியாகப் பாதிப்பு ஏற்படும் என தெரிகிறது.