“அம்மாவின் இளமை ரகசியம் இதுதான்”… ஜான்வி கபூர் பகிர்ந்த டிப்ஸ்
எப்போதும் இளமையாகவும் அழகாகவும் தோன்றிய ஸ்ரீதேவியின் இளமை ரகசியம் குறித்து, அவரது மகள் ஜான்வி கபூர் டிப்ஸ் கொடுத்துள்ளார்.;
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இந்திய சினிமாவின் “முதல் பெண் சூப்பர் ஸ்டார்” எனப் போற்றப்பட்ட அவர், 1967-ம் ஆண்டு ‘கந்தன் கருணை’ திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்த ஸ்ரீதேவி, தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் உள்ளனர். நடிகை ஸ்ரீதேவி 2018-ம் ஆண்டு, 54 வயதில் காலமானார்.
எப்போதும் இளமையாகவும் அழகாகவும் தோன்றிய ஸ்ரீதேவியின் இளமை ரகசியம் குறித்து, அவரது மகள் ஜான்வி கபூர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில், “எங்கள் வீட்டில் காலை உணவில் பழங்கள் தவறாமல் இடம்பெறும். மீதமிருக்கும் பழங்களை ஜூஸாக்கி அம்மா முகத்தில் தேய்த்துக்கொள்வார். சிறிது நேரம் கழித்து கழுவினால் முகம் பளிச்சென்று மாறிவிடும். பழங்கள் முகச் செல்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, இறந்த செல்களை நீக்க உதவுகின்றன. இந்த பழக்கத்தை அம்மா தொடர்ந்து கடைப்பிடித்தார். அந்த பழக்கம் எனக்கும் வந்துவிட்டது. இதுவே அம்மாவின் இளமை ரகசியம்” என்று ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.