வேலை கிடைக்க ஏ.ஆர்.ரகுமான் மீண்டும் இந்து மதத்திற்கு மாறவேண்டும் - பாடகர் அனுப் ஜலோட்டா
இந்தி திரைப்படத் துறையில் ‘சமூகப் பாகுபாடு’ தொடர்பாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த கருத்துகள் இணையத்தில் பேசு பொருளானது.;
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், “கடந்த 8 ஆண்டுகளாக எனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்து விட்டன. சினிமாத்துறை சமூகம் சார்பானதாக மாறி விட்டது. திரைத்துறையில் அதிகார கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் இதற்கு காரணமாக இருக்கலாம். படைப்பாற்றல் இல்லாதவர்களே, அனைத்து முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியுடன் இருக்கின்றனர். இது சமூகம் தொடர்பானதாகவும் இருக்கலாம்," என்று தெரிவித்தார்.
ஏ.ஆர்.ரகுமானை விட பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட ஒருவரை சந்தித்ததில்லை என கங்கனா ரனாவத் தெரிவித்திருந்தார்.திரை உலகில் பெரும் விவாதப் பொருளாக மாறிய இந்த சம்பவத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்து வருகிறது. பாடகர் சங்கர் மகாதேவன், மலையாள இசை அமைப்பாளர் கைலாஸ் மேனன், பாடகி சின்மயி உள்பட திரை உலக பிரபலங்கள் பலர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் பாடகரான அனுப் ஜலோட்டா ஏ.ஆர். ரகுமான் விவகாரம் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியிருக்கிறது. இந்தியில் வெளியாகியிருக்கும் அந்த வீடியோவில் அனுப் ஜலோட்டா “இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் முன்பு இந்துவாக இருந்தவர். அதன் பிறகு இஸ்லாத்திற்கு மாறினார். பின்னர் நிறைய வேலை செய்தார். பெயரும் புகழும் பெற்றார். அவருக்கு நிறைய அன்பு கிடைத்தது. ஆனால் மதத்தால் அவருக்கு போதிய வேலை கிடைக்கவில்லை என்று ரகுமான் நினைத்தால் அவர் மீண்டும் இந்து மதத்திற்கு மாறுவது குறித்து யோசிக்கலாம். இந்து மதத்திற்கு மாறிவிட்டால் மீண்டும் வேலை கிடைக்கும் என்று நம்புகிறார். அவரின் பேட்டியை பார்த்து நான் புரிந்து கொண்டது அது தான். அதனால் மீண்டும் இந்துவாக மாறுமாறு வலியுறுத்துகிறேன். அப்படி மாறிய பிறகு அவருக்கு மீண்டும் வேலை கிடைக்கிறதா என்று பார்க்கலாம்” என்றார்.