ஹிப்ஹாப் ஆதி இயக்கும் “மீசைய முறுக்கு 2” படத்தின் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஹிப்ஹாப் ஆதி இசையமைத்த, ‘டக்கர்’ பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது;

Update:2025-09-01 19:45 IST

சென்னை,

தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி. திரைத் துறையில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். இவரின் பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தனி ஒருவன், ஆம்பள, அரண்மனை உள்ளிட்ட படங்களுக்கு இவர் இசையமைத்து உள்ளார்.மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார். கடைசி உலகப் போர் எனும் படத்தை தானே தயாரித்து, இயக்கி, நடித்து, இசை அமைத்திருந்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இவர் இசையமைத்த, 'டக்கர்' என்ற பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர், 'ரிட்டர்ன் ஆப் தி டிராகன்' என்ற பெயரில் லண்டன், மலேசியா போன்ற வெளிநாடுகளில் வெற்றிகரமாக இசைக் கச்சேரி நடத்தி உள்ளார். மீண்டும் 'செர்டிபைடு செல்ப் மேட்' என்ற புதிய ஆல்பம் பாடல் ஒன்றை எழுதி, பாடி, இசையமைத்துள்ளார்.

இசையமைப்பாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய ஹிப் ஹாப் தமிழா ஆதி, தனது முதல் படமான ‘மீசைய முறுக்கு’ மூலம் கதாநாயகன், இயக்குநர் என இரு வேடங்களிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு சுந்தர் சி தயாரிப்பில் வெளியானது. இப்படத்தில் ஆத்மிகா, விவேக், ஆர்ஜே விக்னேஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டங்களை எளிமையாக சொல்லிய அந்த படம் இளைஞர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் இந்த படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘மீசைய முறுக்கு 2’ படத்தை ஹிப்ஹாப் ஆதி இயக்க இருக்கிறார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை என அனைத்தையும் ஹிப்ஹாப் ஆதி மேற்கொள்கிறார். சுந்தர் சி – குஷ்பு ஆகியோர் முதல் பாகத்தை தயாரித்தது போலவே, இந்தத் தொடர்ச்சிப் படத்தையும் தயாரிக்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்