சில படங்களை ரீமேக் செய்து கெடுக்காமல் இருப்பது நல்லது - ராணா டகுபதி
மலையாளத்தில் அழகாக உருவாகி இருந்த ‘பெங்களூர் டேஸ்' படத்தை, நாங்கள் ரீமேக் என்ற பெயரில் கெடுத்துவிட்டோம் என்று ராணா டகுபதி கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
மலையாளத்தில் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்ற படம் ‘பெங்களூர் டேஸ்'. துல்கர் சல்மான், நிவின்பாலி, பகத்பாசில், பார்வதி திருவோத்து, நஸ்ரியா ஆகியோர் நடித்த இந்தப் படத்தை, 2016-ம் ஆண்டு ‘பெங்களூர் நாட்கள்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்தனர். இதில் ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா டகுபதி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஆனால் மலையாளத்தில் இருந்த அளவுக்கு, தமிழ் படம் ரசிகர்களின் மனதிற்கு நெருக்கத்தை அளிக்கவில்லை. இந்தப் படம் பற்றி இப்போது ராணா டகுபதி மனம் திறந்திருக்கிறார். அவர் கூறுகையில், ‘‘மலையாளத்தில் அழகாக உருவாகி இருந்த ‘பெங்களூர் டேஸ்' படத்தை, நாங்கள் தமிழில் ரீமேக் என்ற பெயரில் கெடுத்துவிட்டோம்.
அந்தப் படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் கூட ஆர்யா என்னிடம் ‘மச்சான், மலையாளத்தில் நிவின்பாலி, துல்கர் சல்மான், பகத் பாசில் அனைவரும் இளமை துள்ளலோடு இருந்தனர். இங்கே நாம் மிடில் ஏஜில் இருக்கிறோம்' என்று கிண்டலடித்தார். இறுதியில் அவர் சொன்னதுதான் நடந்தது. ரசிகர்கள் அந்தக் கதைக்கு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இனிவரும் காலங்களிலாவது, சில படங்களை ரீமேக் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவதுதான் நல்லது’’ என்று கூறினார்.