நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் - பெண் சிக்கினார்
போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொண்டு பேசிய மர்ம பெண் ஒருவர், ரஜினிகாந்த் வீட்டில் குண்டுவெடிக்க போவதாக கூறினார்.;
கோப்புப்படம்
நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு மின்னஞ்சல் மூலமாக ஏற்கனவே 4 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண்ணை தொடர்பு கொண்டு பேசிய மர்ம பெண் ஒருவர், போயஸ்கார்னிடல் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் குண்டுவெடிக்க போவதாக கூறினார். அதேபோல் சினிமா இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் வீட்டிலும் குண்டு வெடிக்க போகிறது என்று கூறிவிட்டு அந்த பெண் போனை வைத்துவிட்டார்.
இதுதொடர்பாக போலீசார் அதிரடி விசாரணை நடத்தினார்கள். போனில் பேசி மிரட்டல் விடுத்த பெண்ணின் பெயர் ராதா (34 வயது) என்றும், சென்னை அயனம்பாக்கத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. ராதாவை பிடித்து வந்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது. அவரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்க போலீசார் ஏற்பாடு செய்தனர்.
நேற்று டி.ஜி.பி. அலுவலகத்துக்கு வழக்கம்போல் வந்த மிரட்டல் மின்னஞ்சல் கடிதத்தில், மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவிலில் குண்டுவெடிக்க போவதாக கூறப்பட்டிருந்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சோதனை நடத்தி, அந்த மிரட்டல் வெறும் புரளி என்பதை உறுதிப்படுத்தினார்கள்.