சின்ன சின்ன ஆசையில் தொடங்கிய பயணம்..34 ஆண்டுகளாக இசை உலகை ஆளும் இசைப்புயல்
1992-ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் தனது முதல் படமான ‘ரோஜா’விற்கு இசையமைத்தார்.;
இந்திய சினிமாவில் அசைக்க முடியாத இசையமைப்பாளராக விளங்கி வருபவர் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான். இந்தியா மட்டுமின்றி கடல் கடந்தும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இந்திய இசையமைப்பாளராக ஏஆர் ரகுமான் திகழ்கிறார். மேற்கத்திய இசையை இந்தியர்கள் கேட்டு வந்ததை மாற்றி, தனது அசாத்திய திறமையால் இந்திய இசையை உலகம் முழுவதும் பரவச் செய்தவர் ஏ.ஆர். ரகுமான்.ரகுமான் ஜனவரி 6, 1966-ஆம் ஆண்டு ஆர்.கே. சேகர் – கரீமா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். ரகுமானின் தந்தையும் இசையமைப்பாளர்தான். ஆனால் எதிர்பாராத விதமாக ரகுமான் ஒன்பது வயதிலேயே தந்தையை இழந்தார். ரகுமானின் இயற்பெயர் “திலீப் குமார்”. பின்னர் ஏற்பட்ட மனமாற்றம் காரணமாக இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.
தந்தையை இழந்த ரகுமான், தனது தந்தையின் இசை வாத்தியங்களை மற்றவர்களுக்கு வாடகைக்கு கொடுத்து சிறு வருமானம் ஈட்டினார். இதன் மூலமாக சிறுவயதிலேயே இசை சார்ந்த துறையில் நுழைந்தார்.இசையின் மீது ஏற்பட்ட அதீத ஆர்வத்தால் தன்ராஜ் மாஸ்டரிடம் இசை கற்க சேர்ந்தார். இளையராஜா, எம்.எஸ். விஸ்வநாதன், குன்னக்குடி வைத்தியநாதன் போன்றோரின் குழுக்களில் இடம்பெற்று அவர்களுடன் பணியாற்றினார். இதற்கிடையில் புதிது புதிதாக இசையை வடிவமைத்து, தனக்குத் தானே பயிற்சியும் பெற்று வந்தார். அவ்வாறு அமைத்த இசையை நண்பர்களுக்கு இசைத்து காண்பிப்பார்.
1992-ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் தனது முதல் படமான ‘ரோஜா’விற்கு இசையமைத்தார். சின்ன சின்ன ஆசை, புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது ஆகிய பாடல்கள் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது. இன்றும் கூட பலரது செல்போன்களில் புது வெள்ளை மழை பாடலின் கரோக்கி இசை ரிங்டோனாக ஒலிப்பதை கேட்க முடிகிறது.‘ரோஜா’ படத்திற்குப் பிறகு ஏ.ஆர் ரகுமானுக்கு தொடர்ச்சியாக படங்கள் குவிந்தன. முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார் ரகுமான். மிகக் குறுகிய காலத்திலேயே தேசிய விருது, தமிழ்நாடு மாநில திரைப்பட விருது உள்ளிட்ட மொத்தம் 170-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளார்.
2008-ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படம் அவருக்கு ஆஸ்கர் விருதை பெற்றுத் தந்தது. மேலும், இந்தப் படத்தின் ஜெய் ஹோ பாடல் சிறந்த பாடலாக தேர்வு செய்யப்பட்டு இன்னொரு ஆஸ்கர் விருதும் வழங்கப்பட்டது. இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்ற முதல் இந்தியர் ஏஆர்ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்கர் விருதை தனது இரு கைகளாலும் உயர்த்திப் பிடித்து, “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று அவர் கூறினார். இசை உலகில் தனி சாம்ராஜ்யமே நடத்திக்கொண்டு இருக்கும் ஏ.ஆர். ரகுமான், இன்னும் பல விருதுகளை வென்று இசை வெள்ளத்தில் ரசிகர்களை தொடர்ந்து மெய்மறக்க வைக்கிறார். அவரது பிறந்த நாளான இன்று, அவரை வாழ்த்துவோம்.