திராவிட குடும்பத்தில் உள்ள மொழி என்று கமல் பேசியதை அரசியல் ஆக்கிவிட்டார்கள் - அமீர்

தமிழில் இருந்து பிறந்தது கன்னடம் என்று கமல் பேசியது விவாதப்பொருளாக மாறிய நிலையில், ‘கமல் பேசியதை அரசியல் செய்ய நினைக்கும் நபர்கள் பெரியதாக்கிவிட்டார்கள்’ என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.;

Update:2025-06-05 19:11 IST

சென்னை,

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் 'தக் லைப்'. கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் கமல்ஹாசனின் 234வது படமாகும். 1987-ல் வெளியான 'நாயகன்' படத்திற்குப் பிறகு மணிரத்னம்-கமல் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சிலம்பரசன், திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், அலி பசல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கன்னடம் , தமிழிலிருந்து உருவானது என்று கமல்ஹாசன் கூறியதற்கு கர்நாடகாவில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்த விவகாரம் கோர்ட்டு வரை சென்றது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், கர்நாடகாவில் 'தக் லைப்' படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக கமல்ஹாசன் தரப்பு வாதிட்டதையடுத்து, பட வெளியீடு ஒத்திவைக்கப்படுவதால் வழக்கு விசாரணையை ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம் என கர்நாடக ஐகோர்ட்டு தெரிவித்தது.

'தக் லைப்'  திரைப்படத்தை பார்க்கவந்த இயக்குநர் அமீர், "என்னுடைய முதல் திரைப்படமான 'மௌனம் பேசியதே' இசை வெளியீட்டு விழாவின் போது கமல்-மணிரத்னம் இருவரும் பங்கேற்றார்கள். அது நடந்து கிட்டத்தட்ட 23 வருடங்கள் ஆகிவிட்டது, அப்போதே நான் அவர்களிடம் உங்கள் இருவரின் கூட்டணியில் மீண்டும் திரைப்படம் எப்போது பார்க்கலாம் என்று கேட்டேன். அதற்கு மணி சாரிடம் கேளுங்கள் என்று கமல் சார் சொன்னார். கிட்டத்தட்ட 23 வருடங்கள் கழித்து அவர்கள் கூட்டணியில் ஒரு படம் வெளியாகியுள்ளது. நான் எப்படி நாயகனை ஒரு ரசிகனாக திரையரங்கில் சென்று பார்த்தனோ, அதேபோல ஒரு ரசிகனாக தான் இந்த திரைப்படத்தையும் பார்க்க வந்துள்ளேன்" என்று பேசினார்.

பின்னர் கமல் விவகாரம் குறித்து கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர், "கமல் எந்த மொழியையும் குறைத்தும் பேசவில்லை, தவறாகவும் பேசவில்லை. திராவிட குடும்பத்தில் உள்ள மொழி என்று தான் கமல் பேசினார். அது கர்நாடக மக்கள், சிவராஜ் குடும்பத்தினர் என அனைவராலும் சரியான அர்த்தத்துடன் தான் புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால் அதை அரசியல் செய்யணும்னு நினைக்குற சில கர்நாடக அமைப்புகள் பெரிதாக மாற்றிவிட்டார்கள்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்