ஜனநாயகனுக்கும், பராசக்திக்கும் இடையே போட்டி இல்லை- பாடகர் வேல்முருகன் பேட்டி

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இரண்டு பெரிய படங்கள் வெளியாக உள்ளன.;

Update:2026-01-03 10:05 IST

தூத்துக்குடி,

2026 புத்தாண்டில் வரும் முதல் பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படமும், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பராசக்தி' படமும் வெளியாக உள்ளது.

அரசியலில் நுழைந்துள்ள நடிகர் விஜய்க்கு 'ஜனநாயகன்' கடைசி படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. பாலகிருஷ்ணா நடிப்பில் தெலுங்கில் வெளிவந்து வெற்றிபெற்ற 'பகவந்த் கேசரி'-ன் ரீமேக் படமாக இது இருக்கலாம் என்று சொல்லப்பட்டாலும் விஜய் படம் என்றால் எப்போதுமே அதில் 'ஸ்பெஷல்' இருக்கும் என்பது ரசிகர்களுக்கு தெரியும். அதனால் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது.

'பராசக்தி' படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோ என்றாலும், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோரும் நடித்திருப்பதால் இப்படத்திற்கும் பலத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. 1965-ம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பான கதை என்பதால், 'வின்டேஜ்' ரசிகர்களுக்கு இது விருந்தாக அமையும் என்று கூறப்படுகிறது. 'ஜனநாயகன்', 'பராசக்தி' இரண்டில் யார் முந்துவது? என்ற போட்டி ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்த நிலையில், பிரபல பாடகரான வேல்முருகன் நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்து முடித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்த போது, "விஜயின் ஜனநாயகனுக்கும், சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திற்கும் எவ்வித போட்டியும் இல்லை; 2 படமும் பார்க்கக் கூடிய ரசிக்கக்கூடிய படங்கள்தான். பராசக்தி படத்தில் இரண்டு பாடல்களை பாடியுள்ளேன். பெரிய படங்களுக்கு எதிர்ப்புகள் வருவது இயல்புதான்; அப்படித்தான் பராசக்திக்கும் வருகிறது" என்று பேட்டியில் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்