கன்னட நடிகரின் கார் கண்ணாடியை உடைத்து புதிய படத்தின் ‘ஹார்டு டிஸ்க்’ திருட்டு

கன்னட நடிகரின் கார் கண்ணாடியை உடைத்து புதிய படத்தின் ‘ஹார்டு டிஸ்க்’-ஐ திருடிய ராம்ஜி கும்பலை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2025-11-02 06:05 IST

விஜயநகர்,

கன்னட நடிகரும், இயக்குனராகவும் இருப்பவர் ரவிகவுடா. இவர் நடித்து இயக்கி உள்ள ‘ஐ ஆம் காட்’ என்ற திரைப்படம் வருகிற 7-ந்தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் ரவிகவுடா, விஜயநகர் பகுதியில் தனது காரை நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் ரவி கவுடாவின் காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை திருடி சென்றுவிட்டனர்.

ரவிகவுடா தனது காரை எடுக்க வந்தபோது, கண்ணாடி உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் காரின் உள்ளே இருந்த ஒரு ‘ஹார்டு டிஸ்க்’, ரூ.75 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மாயமாகி இருந்தது. அப்போது தான் யாரோ மர்மநபர்கள் கார் கண்ணாடிைய உடைத்து ‘ஹார்டு டிஸ்க்’, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

மர்மநபர்கள் திருடி சென்ற ஹார்டு டிஸ்க்கில் ‘ஐ ஆம் காட்’ படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை எடிட் செய்து அதனை தயாரிப்பாளரிடம் காண்பிக்க வைத்திருந்தார். இதுகுறித்து ரவிகவுடா, விஜயநகர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் போலீசார், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது 2 பேர் காரின் கண்ணாடியை உடைத்து பணம் மற்றும் ஹார்டு டிஸ்கை திருடி சென்றது பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார், சுற்றியிருக்கும் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அப்போது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் தமிழ்நாட்டுக்கு தப்பி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து விஜயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கார்களின் கண்ணாடியை உடைத்து திருடும் திருச்சியை சேர்ந்த பிரபல திருட்டு கும்பலான ராம்ஜி கும்பலை சேர்ந்த ஜெயசீலன் மற்றும் அவரது மகன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் தமிழ்நாட்டுக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த ஜெயசீலனை கைது செய்தனர். மேலும் அவரது மகனை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்