கண்ணதாசன் நினைவு நாள்: எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை - கமல்

கவிஞர் கண்ணதாசன் நினைவு நாளில் கமல் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.;

Update:2025-10-17 16:08 IST

சென்னை,

முத்தையா என்ற இயற்பெயரை கொண்ட கவிஞர் கண்ணதாசன் 1927-ம் ஜூன் 24 ஆம் தேதி காரைக்குடி அருகேயுள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்தார். தாலாட்டு பருவத்தில் இருந்து தள்ளாடும் வயது வரை தமிழர்களின் செவிகளில் ஒலித்துக் கொண்டு இருப்பது கண்ணதாசன் பாடல்கள் ஆகும். கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. பத்திரிக்கை ஆசிரியர் பணிக்கு சென்றபோது அவர் வைத்துக் கொண்ட புனைப் பெயர் கண்ணதாசன். அந்தப் பெயரே நிரந்தரமாக நிலைத்துவிட்டது. திரைப்படப் பாடல்கள் 7500-க்கும் மேல், தனிக் கவிதைகள் 5000-க்கும் மேல், மற்றும் 195 தனி நூல்கள் எழுதி ‘கவியரசு’ அழியாப்புகழ் பெற்றார்.

‘வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்; வாசல் தோறும் வேதனை இருக்கும்’ என கண்ணதாசன் எழுதிய பெரும்பாலான பாடல்கள் அவரின் அனுபவத்தில் விளைந்தவை. இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, பலரின் துயரங்கள், துன்பங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடக்கும் பலருக்கு உத்வேகமாக இருப்பவை கண்ணதாசனின் பாடல்கள்.

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய பிரபலங்களில் ஒருவரான கண்ணதாசன் இன்றும் தமிழின் முதன்மையான பாடலாசிரியராகவே கருதப்படுகிறது. இவர் அளவிற்கு பாடல்களில் தத்துவத்தையும் அழகியலையும் சேர்த்தவர்கள் இல்லை என்கிற அளவிற்கு கண்ணதாசனுக்கான இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை.

இந்த நிலையில், கண்ணதாசன் நினைவு நாளான இன்று நடிகர் கமல் ஹாசன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அய்யா, இன்று நீங்கள் இறந்ததாகச் செய்தி பரவி இருக்கிறது. காவியக் கவிதைகளுக்கு மரணமில்லை என்பது பலருக்கும் தெரியும். எனக்கோ, அவர் கவிதை பற்றிய பேச்சு காதில் பட்டாலே அது நினைவு நாள்தான். அவர் கவிதையை வாசித்தால் அன்று எனக்கது கவிஞர் பிறந்த நாளாகிவிடும் ..எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை. வாழும் கவிஞர் அனைவருக்கும் இன்றென் வணக்கங்கள்.என்றென்றும் உங்கள் நான்.” எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்